மீண்டும் விஷ்வரூபம் எடுக்கும் கொரோனா அலை

இந்தியாவில் மீண்டும் அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பு, புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் 8 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா,மகாராஷ்டிரா, உள்ளிட்ட சில  மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி பாதிப்பு 3 மாதங்களில்  நேற்று நிலவரப்படி 5 ஆயிரத்தை தாண்டி இருந்தது. நேற்று மட்டும் 5,233 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று புதிய பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது.

நாட்டில் இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 2 ம்தேதி கொரோனா  பாதிப்பு 7,554 ஆக இருந்தது. அதன்பிறகு தற்போது, மீண்டும் பாதிப்பு  7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,97,522 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு சுமார் 4 மாதங்களுக்கு பிறகு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 2,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று முன்தினம் 1,881 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், புதிய பாதிப்பு 42 சதவீதம் அதிகரித்துள்ளது. தலைநகர் மும்பையில் மட்டும் 1,765 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கேரளாவில் புதிய பாதிப்பு 1,494ல் இருந்து 2,271 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர டெல்லியில் 564, கர்நாடகாவில் 376, ஹரியானாவில் 247, தமிழ்நாட்டில் 195, உத்தரபிரதேசத்தில் 163 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பினால்  நாடு முழுவதும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,723 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,591 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,40,301 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32,498 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.71% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.08% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 1,94,59,81,691 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,43,748 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.