கோவைக்கு வந்தது சுரங்கப்பாதை திட்டம்

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.

கோவை மாவட்ட பகுதிகளான ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையை கடக்க முடியாமல், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதைத்தவிர்க்க, முக்கிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுரங்க பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள குளங்கள் மற்றும் பல்வேறு பணிகள் ரூ.1500 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுக்குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது, கோவையில்  டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் மேம்பால பணிகளுடன், சுரங்கபாதையும் அமைக்கப்படும். இதனால், போக்குவரத்து நெருக்கடி பெருமளவு குறையும் என, கூறினார்.