ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல ஏற்றுமதிக்கான சிறப்பு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்திய அளவில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் இந்த கூட்டமைப்பில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது பெருமையாக இருப்பதாக கூறினார்.

இந்தியாவின் ஏற்றுமதியில் தென்மண்டலம் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக தென் மண்டலத்திலேயே தமிழகத்தின் பங்கு மிக அதிகம். இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு 3 வது இடத்தில் உள்ளது என்றார்.

தென்மண்டலங்களின் ஏற்றுமதி அடுத்த 5 ஆண்டுகளில் 35 சதவீதமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்றுமதி கட்டமைப்பை ஊக்குவிக்க ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளது
இந்தியாவில் ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், அதனை முதலிடத்திற்கு கொண்டு வருவது தான், தனது லட்சியம் என குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளோம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.