ட்ரம்ப் ட்விட்டரை பயன்படுத்த அனுமதி – எலான் மஸ்க் அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டர் தடையை திரும்பப் பெறப்போவதாக தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் 3.36 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் டாலர்) ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாப் பல்வேறு கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதால் அவரின் கணக்கை நீக்குவதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது. அந்தக் கணக்கில் பதிவிடப்பட்ட அத்தனை ட்வீட்களும் நீக்கப்பட்டன.

மேலும், தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக 70,000க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டரை பயன்படுத்த டொனால்ட் டிரம்பிற்கு ஒரு போதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறி இருந்தார்.

முடக்கப்பட்ட டிரம்பின் ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் ட்விட்டரை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்நிலையில், டிரம்பின் ட்விட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் என டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இருந்து ட்ரம்ப் தடை செய்யப்பட்டது அதிபரின் குரலை மெளனமாக்கவில்லை என்றும், மாறாக வலதுசாரிகள் மற்றும் மக்கள் மத்தியில் அவரது கருத்து சொல்லும் வேகத்தைப் பெருக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், டிரம்பின் மீதான ட்விட்டர் தடை தார்மீக ரீதியாக தவறானது மற்றும் முட்டாள்தனமான முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.