வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழகம் – முதல்வருக்கு குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு

தமிழ்நாட்டை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பாராட்டியுள்ளார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் அனுப்பிரியா சிங் படேல், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையர் சண்முகசுந்தரம், இணை வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையாநாயுடு தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசியுள்ளார்.

இந்நிகழ்வில் வெங்கையா நாயுடு பேசியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில்துறையில், உற்பத்தித் துறையில் தமிழ்நாடு மிகவும் உயர்ந்து விளங்குவதை நாம் அனைவரும் அறிவோம். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

மோட்டார் வாகன உற்பத்தியில், அவற்றின் உபபொருட்கள் உற்பத்தியில், ஜவுளி உற்பத்தியில், தோல் பொருட்கள் உற்பத்தித் தொழிலில், இலகுரக – கனரக இயந்திரவியலில், பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தியில், மென்பொருள் மற்றும் மின்னணுச் சாதனங்கள் உற்பத்தித் தொழில்களிலெல்லாம் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

தமிழக மக்கள் இயல்பிலேயே அறிவு நுட்பமும் கடும் உழைப்பும் கொண்டவர்கள். தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசும் அந்தத் திசைவழியில் முன்னேறிச் செல்ல தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை – பெங்களூரு தொழில் வழித்தடம், சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தடம் ஆகியவை நிறைவடையும்போது மாநிலத்தின் பொருளாதார திறனில் மேலும் மாற்றம் ஏற்பட்டு, ஏற்றுமதிக்கான மிகப்பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றார்.