எங்கே போகிறது தமிழ் சினிமா ?

தமிழ் சினிமா தற்போது நிலை தடுமாறி கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் பலரின் மனதில் எழுந்துள்ளது. ஏன், எதற்கு, என்ற கேள்விகளுக்கு சமீபத்தில் வந்த மாஸ் ஹீரோக்களின் மொக்கை படங்களே அதற்கு பதில்.

தமிழ் சினிமா என்று சொன்னாலே கண்முன் தோன்றும் முன்னணி ஹீரோக்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் மற்றும் விக்ரம் போன்றவர்கள் தான். இவர்களை நம்பி மட்டுமே பெரிய பட்ஜெட் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள்.

ஆனால் இந்த ஹீரோக்களில் ஒருசிலரின் படங்கள் சமீபத்தில் சரியாக ஓடவில்லை. குறிப்பாக ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், தனுஷின் மாறன் ஆகிய படங்களை கூறலாம்.

ஹீரோக்கள் கதையை கேட்காமலேயே நடிக்கிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. அண்ணாத்த படத்தை எடுத்துக்கொண்டால் டிவி சீரியலை கொழப்பி போட்டு எடுத்தது போன்றுதான் இருந்தது. இந்த கதையை இயக்குனர் ரஜினியிடம் சொல்லும் போது ஒருவேளை கதை மாஸாக தெரிந்திருக்கலாம், இல்லையெனில் ரஜினி டிவி சீரியல் பார்க்காமல் இருந்து இருக்கலாம். இப்படிப்பட்ட மாஸ் ஹீரோக்களின் படங்கள் கதை கனம் இல்லாமல் வருவது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமற்றதே. அதை முன்னணி ஹீரோக்கள் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது. கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பான் இந்தியா படங்கள் வரவில்லை.

கதையம்சம் கொண்ட படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் வந்திருந்தாலும் அது எதுவுமே அனைத்து மாநிலங்களும் கொண்டாடும் படமாக இருக்கவில்லை. ஆனால் மற்ற மொழி படங்களான புஷ்பா, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் போன்ற படங்கள் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிநடைபோட்டு வருகின்றன. இதனை தமிழ் சினிமா இயக்குனர்களும், நடிகர்களும் கவனிக்க வேண்டியுள்ளது. தற்போது உள்ள ரசிகர்கள் எல்லோரும் கதை முக்கியத்துவம் கொண்டு படம் பார்க்க விரும்புகிறார்கள். மக்களின் ரசனை மாறிக்கொண்டு வருவதை நம்மால் உணரமுடிகிறது. மாஸ் ஹீரோக்கள் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தால் மக்களிடம் அமோக வரவேற்பு இருக்கும், ஆனால் அதை செய்ய ஹீரோக்கள் தவறி விடுகிறார்கள். இதில் கமல்ஹாசன் மட்டுமே விதிவிலக்கு.

கைதி, அசுரன், சூரரைப் போற்று, சார்பட்டா பரம்பரை, மாநாடு போன்ற படங்கள் தமிழ் சினிமாவை 1 மடங்கு தூக்கிவிட்டால் அண்ணாத்த, பீஸ்ட், வலிமை, மாறன் போன்ற படங்கள் 10 மடங்கு கீழே தள்ளி விடுகிறது.

ஆனால் இப்படிப்பட்ட படங்கள் வருவதிலும் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால், மக்கள் கதையை கவனிக்கத் தொடங்கியுள்ளனர் என்பதுதான். வருங்காலத்தில் ஹீரோக்கள் ‘மாஸ்’ என்ற பட்டத்தை விட்டு அவர்களின் இயல்பிலேயே, கதைக்கு முக்கியத்துவம் அளித்து நடிக்க வேண்டும்.