உக்ரைனில் தொடரும் துயரம்!

உலகின் வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்து 50 நாட்களுக்கும் மேல் ஆகிறது. போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் ஒருபுறம், உலக நாடுகள் முழுவதற்கும் இந்த சிக்கலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஒருபுறம், எப்போது இதற்கு தீர்வு என்று புரியாத குழப்பம் ஒருபுறம் என்று இந்தப் போரானது உலகெங்கும் துன்ப விதைகளை விதைத்து இருக்கிறது.

உலகின் பொருளாதார வளமும், இயற்கை வளமும் மிக்க நாடுகளில் ஒன்றான உக்ரைன் இன்று கொன்று குவிக்கப்படும் மக்கள், இடிந்து நொறுங்கி உள்ள கட்டிடங்கள், பாலங்கள், அகதிகளாகப் புலம் பெயரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கூட்டம், கேட்பாரற்றுக் கிடக்கும் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள், அழியும் பொருளாதாரம் என்று சிதறிப் போய் கிடக்கிறது. உலகின் பல நாடுகளின் எதிர்ப்பு, உள்நாட்டிலேயே சிலருடைய எதிர்ப்பு என்று ரஷ்யாவும் நிலைதடுமாறி இருக்கிறது.

நேட்டோ படைகள் வந்து ரஷ்யாவை கேள்வி கேட்கும், பதில் சொல்லும் என்றெல்லாம் எண்ணி களத்தில் இறங்கிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இப்பொழுது தன்னந்தனியாக களத்தில் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக சேர்ந்து பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு அமைதி தத்துவம் பேசிக் கொண்டிருக்கின்றன. மாறி, மாறி நடந்து கொண்டிருக்கும் உக்ரைன், ரஷ்யா பேச்சுவார்த்தை முடிவுகள் எந்த தீர்வையும் எட்ட முடியாமல் போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால் துயரம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

உலகின் பல நாடுகளிலும் சமையல் எண்ணெய், பெட்ரோலிய எரிபொருட்கள், எரிவாயு தொடங்கி மருந்துப்பொருட்கள், ஆயுதங்கள் என்று பல சிக்கல்கள் பொருளாதார தளத்தில் உருவாகியுள்ளன. அதேநேரத்தில் கண்ணுக்கெட்டிய வரை இந்த போர் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்ற தீர்வு தெரியவில்லை.

இது உக்ரைன் நாட்டின் துயரம் மட்டுமல்ல, உலகின் துயரமும் தான். இந்தப் போரினால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யா, நேட்டோ நாடுகளுக்கு தனது எல்லையில் இடம் தந்து விடக்கூடாது என்று எண்ணி தாக்குதலை தொடங்கியது. கூடவே என்னென்னவோ கணக்குப் போட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஒரு கை பார்க்கலாம் என்று எதிர்த்து நின்றார். இதில் நேரடி தொடர்பு கொண்ட இந்த இரு நாடுகளை தவிர இன்று மற்ற நாடுகளும் கூட பல வகையிலும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மாணவர்கள் சென்று அங்கு மருத்துவம் பயின்று வந்தனர். இந்த போர்க்காலத்தில் தங்களது படிப்பை பாதியில் விட்டுவிட்டு உயிர் பிழைத்து அவர்கள் நாடு திரும்புவதே பெரிய சாதனையாக மாறிப்போனது.

இந்திய அரசு பெரும் முயற்சி செய்து மாணவர்களை திரும்பக் கொண்டு வந்து சேர்த்தது. இனி அவர்களின் கல்வியின் எதிர்காலம் என்ன என்பது பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது. அதே போல உக்ரைனில் இருந்து அதிக அளவு சமையல் எண்ணெய் இந்தியாவிற்கு இறக்குமதி ஆகிறது. இந்தப் போரினால் அடுத்த ஆண்டு இறக்குமதி என்ன ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்கே போர் தொடங்கிய பத்தே நாளில் இங்கு சுமார் 25 முதல் 35 சதவீதம் எண்ணெய் விலை ஏறிவிட்டது.

இதுபோலவே உலகின் பல நாடுகளிலும் சமையல் எண்ணெய், பெட்ரோலிய எரிபொருட்கள், எரிவாயு தொடங்கி மருந்துப்பொருட்கள், ஆயுதங்கள் என்று பல சிக்கல்கள் பொருளாதார தளத்தில் உருவாகியுள்ளன. அதேநேரத்தில் கண்ணுக்கெட்டிய வரை இந்த போர் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்ற தீர்வு தெரியவில்லை. நாட்கள் ஓட தொடங்கி வாரங்களாகி இப்போது 50 நாட்களை கடந்து விட்டது. அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ஒருபுறம் இருந்தாலும், ரஷ்யா எதற்கும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. ஏற்கனவே பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் தாக்குதலால் பாதிக்கப்பட்டு ஒருவாறு மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்த நிலையில் இந்தப் போரானது இன்னொரு பெரிய தடைக்கல்லாக நம் முன்னால் நீடிக்கிறது.

இன்றைய சூழலில் எந்த நாடும் தனித்து இயங்க முடியாத அளவு நிலைமை உள்ளது. இந்த நவீன அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் பல சிக்கல்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். ஆனால் இந்தப் போருக்கு மட்டும் இன்னும் தீர்வு வரவில்லை.

காலம் காலமாக மனித இனத்தை கொன்று குவித்து வரும் இந்தப் போருக்கு ஒரு முடிவு காண்போம். புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!