வாழ்க்கை குறித்த ‘கூர்உணர்வு’ பிறப்பில் வரும் திறமையா?

அடிக்கடி கோபப்படுபவரையும் உணர்ச்சி வசப்படுபவரையும் ‘அவர் sமீஸீsவீtவீஸ்மீ ஆக இருக்கிறார்’ என்று சொல்வதுண்டு! ஆனால், உண்மையில் இதுதான் கூர்உணர்வு (Sensitive) என்பதா? வாழ்க்கை குறித்த கூர்உணர்வைப் பெற நாம் செய்ய வேண்டியது என்ன? அது பிறப்பில் உண்டாவதா அல்லது நாம் அதை வளர்த்துக் கொள்ளமுடியுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமைகிறது இந்த பதிவு!

கேள்வி: உயர்நிலையில் உள்ள பரிமாணங்களை உணர வேண்டுமானால், ஒருவருக்கு வாழ்க்கை பற்றிய கூர் உணர்வு (Life Sensitive) இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். கூர் உணர்வு என்றால் என்ன? அது பிறப்புடன் உண்டாவதா அல்லது நாம் அதை வளர்த்துக் கொள்ளமுடியுமா? ஆம் என்றால் எப்படி?

சத்குரு: எல்லா குழந்தைகளும் ஒன்றுதான் என்று நாம் பார்க்க விரும்பினாலும், அவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பிறந்த நேரத்தில் தொடங்கி அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், எப்படி அழுகிறார்கள், எப்படி தவழ்கிறார்கள், எப்படி தங்கள் கைகளை அசைக்கிறார்கள் என்பது வெவ்வேறு விதமாக இருக்கும். ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். முழுதும் வளர்ந்த மனிதர்களைப் போலவே அவர்களும் வேறுபட்டு இருப்பார்கள் அல்லவா? பிறக்கும்போதே ஒரு குழந்தைக்கும், இன்னொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட திறமை இருக்கும், இன்னொருவருக்கு இருக்காது. வாழ்க்கை பற்றிய கூர்உணர்வு பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறதா? நிச்சயமாக இல்லை.

சில விஷயங்களை பிறப்பு முடிவு செய்திருக்கும். கார் பந்தயத்தில் ஒருவர் வசதியான இடத்தில் இருந்து துவங்கினாலும் விபத்தை ஏற்படுத்திக்கொள்கிறார் அல்லது பந்தயத்தில் கடைசியில் வருகிறார். இன்னொருவர் கடைசியில் துவங்கினாலும் முதலில் வருகிறார். பிறப்பு என்பது உங்கள் திறமையை அதிகரித்துக்கொள்ள ஓரளவு உதவிகரமாக இருக்கலாம். ஆனால் அதுவே உங்கள் திறமையை முடிவு செய்யாது. வாழ்க்கைதான் முடிவு செய்யும் அளவுகோல். வாழ்க்கை பற்றிய கூர்மையான உணர்வு குறித்தும் வாழ்க்கைதான் நிர்ணயம் செய்யும் அளவுகோலாக இருக்கிறது.

வாழ்க்கை குறித்து கூர்உணர்வைப் பெறுவது எப்படி?

வாழ்க்கை குறித்த கூர்உணர்வைப் பெறவேண்டுமானால் முதலில் நீங்கள் வாழ்க்கையாகவே மாறவேண்டும். உங்களையே ஒருமுறை பார்த்து சொல்லுங்கள், அப்படி நீங்கள் வாழ்க்கையாகவே இருக்கிறீர்களா? 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் நீங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதிபோல நடந்துகொள்கிறீர்கள்? பெரும்பாலான நேரம் நீங்கள் ஒரு சிந்தனையாகவோ அல்லது ஒரு உணர்வாகவோ அல்லது ஒரு கருத்தாகவோ அல்லது ஒரு கோட்பாடாகவோ அல்லது ஒரு உறவாகவோ இப்படித்தான் இருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் வேறு ஏதோ ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள், வாழ்க்கையாக இல்லை. வாழ்க்கை அல்லது உயிர் குறித்த கூர்அறிவைப் பெற, முதலில் நீங்களே வாழ்க்கையாக மாறவேண்டும்.

நீங்கள் உங்கள் உடலை வழிநடத்திச் செல்ல முடியும் என்றால், மனத்தை எட்ட இருந்தே வழிநடத்த முடியும் என்றால், நீங்கள் இயல்பாகவே உயிர் குறித்த கூர்மையான உணர்வைத் தெரிந்துகொள்வீர்கள். யோகா என்னும் பெயரில் நாங்கள் செய்வது இத்தகைய கூர்உணர்வைக் கொண்டு வருவதுதான். ஏனென்றால் நீங்கள் உயிர் பற்றிய கூர்உணர்வை அடைந்தே ஆகவேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மை நிலையுடன் ஒன்றி இருப்பீர்கள். இப்போது நீங்கள் நான் என்ற அகங்கார உணர்வை மட்டுமே பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் இப்படி சொல்வதுண்டு “நான் உணர்ச்சி வசப்படுபவன்’’ என்று. உங்களுக்கு மிக பலமான அகங்காரம் இருக்கிறது. அதைத்தான் இப்படி சொல்கிறீர்கள்.

கூர்மையான உணர்வு என்றால் எதற்கெடுத்தாலும் வருத்தப்படுதல், கோபப்படுதல் என்பதல்ல. இப்படி செய்வது கூர்உணர்வு ஆகாது. உயிர் குறித்த கூர்உணர்வு உங்களுக்கு இருக்குமானால், மற்ற உயிர்களையும் உங்களைப் போலவே நினைப்பீர்கள். ஏனென்றால், நீங்களும் உயிர்தானே. உங்களைச் சுற்றி இருப்பவரெல்லாம் உங்களைப் போன்ற உயிர்தான். நீங்கள் ஒரு உயிராகவே இங்கு இருப்பீர்கள் என்றால், அடிப்படையாகவே அதை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் ஒரு எண்ணமாக இங்கு இருப்பீர்கள் என்றால், இந்த பிரபஞ்சத்திலிருந்து மிகவும் வேறுபட்டு இருப்பீர்கள். உயிர் என்பதைத் தவிர வேறு ஏதாவது ஒன்றாக நீங்கள் இங்கு இருப்பீர்கள் என்றால், நீங்கள் போலியானவர், உண்மையானவர் அல்ல.

உயிர் குறித்த கூர்மையான உணர்வு உங்களுக்கு வர வேண்டுமென்றால், ஒரு எளிதான வழி இருக்கிறது. உங்களுடைய எண்ணங்கள், உணர்வுகள் எதுவுமே முக்கியமானவை அல்ல என்று நினையுங்கள். அப்படி ஒரு நாளுக்கு மட்டும் முயன்று பாருங்கள். திடீரென்று உங்களுக்கு காற்று, மழை, பூக்கள் சுற்றியுள்ள மனிதர்கள் அனைத்தும் வித்தியாசமாகத் தோன்றும். திடீரென்று உங்களிடமுள்ள உயிர் விழித்தெழும். உங்களுடைய அனுபவம் புத்துணர்ச்சி தரும்.

அப்போது உங்கள் வாழ்க்கை குறித்த கூர்உணர்வு ஏற்படும். ஒருமுறை இந்த வாழ்க்கை குறித்த கூர்உணர்வு வருமானால், மற்ற உயிர்களிடத்தும் அன்பு பாராட்டாமல் இருக்க முடியாது. வேறுவிதமாக இருக்கவே முடியாது. ஏனெனில் அப்போது ‘நான்’ என்பது இந்த உடல் மட்டுமே என்று நினைக்கமாட்டீர்கள். உங்களைச் சுற்றிலும் நீங்கள் பார்க்கும்போது, இந்த ‘நான்’ தான் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பதைக் காண்பீர்கள். அப்போது நீங்கள் இயல்பாகவே ஒவ்வொன்றைக் குறித்தும் கூர்உணர்வுடன் இருப்பீர்கள்.

ஆனால் வாழ்வு குறித்து கூர்அறிவைப் பெறுவது என்பது வேறு. அது ஒரு தத்துவத் தேடுதலோ அல்லது ஒரு கோட்பாட்டைப் பற்றிய அலசலோ அல்ல. நீங்கள் ஒரு உயிராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் வாழ்வு குறித்து கூர்அறிவுடன் இருப்பீர்கள். தற்போது நீங்கள் வாழ்க்கை என்பதை விட்டுவிட்டு ஏதேதோ ஆக முயல்கிறீர்கள், அதுதான் சிக்கல்.ஒரு சிந்தனையாகவும், ஒரு உணர்வாகவும், ஒரு கருத்தாகவும், ஒரு கோட்பாடாகவும், இன்னும் என்னென்னவோ ஆக முயல்கிறீர்கள். உங்கள் உடல், மனம், உணர்வு என்ன சொல்கின்றன என்பது முக்கியமல்ல என்பதை மட்டும் நீங்கள் தெரிந்துகொண்டால், பிறகு திடீரென்று வாழ்க்கை குறித்த கூர்அறிவை மிகவும் உணர்வீர்கள்.