வலை வீசும் மோடி சிக்குமா திமுக?

திமுக தலைவர் ஸ்டாலின், 2019 மக்களவைத் தேர்தல் முதலே, பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடும் விமர்சனம் செய்து வந்தார். அதில் தொடங்கி அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தார்.

ஆனால், ஸ்டாலினின் தில்லி பயணத்தில் சில திருப்புமுனைகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. காரணம், தில்லி பயணத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் போன்ற அனைத்து பாஜக முக்கிய தலைவர்களையும் சந்தித்துள்ளார். அமித்ஷாவுக்கு தில்லி திமுக அலுவலக திறப்பு விழா அழைப்பிதழையும் கொடுத்தார். இது திமுக, பாஜக பக்கம் நகர்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திமுக அலுவலகத்துக்கு சோனியா காந்தியே நேரில் வந்தது காங்கிரஸின் பலவீனத்தை காட்டுகிறது. குறிப்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் வலுவிழந்து வருகிறது என்பதே உண்மை.

2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 10 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், 2020 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதனால் தேஜஸ்வி யாதவ் முதல்வராகும் வாய்ப்பு நூலிழையில் பறிபோனது. இதை நன்கு கவனித்த திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரசுக்கு 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கிகொடுத்தார். அதுவே ஸ்டாலின் பெரும்பான்மை அரசு அமைக்க உதவியது.

இப்போது நடந்த 5 மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக பஞ்சாபில் ஆட்சியை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்துள்ளது. இதை கவனித்த ஸ்டாலின், எதிர்வரும்  மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எண்ணிக்கையை குறைக்க கணக்குப் போடக்கூடும். தில்லியில்  கெஜ்ரிவால் அரசின் கல்வி, சுகாதார திட்டங்களை ஸ்டாலின் பார்வையிட்டு பாராட்டியது கூட இதில் ஓர் அங்கமாகவே பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியை பொறுத்தவரை திமுகவால் காங்கிரஸ் பலன் அடைவதை முற்றிலும் விரும்பவில்லை. காரணம், 2014 மக்களவைத் தேர்தலில் 44 இடங்களை பெற்ற காங்கிரஸ் 2019 மக்களவைத் தேர்தலில் 52 இடங்களை பெற்றது. அதற்கு முக்கிய காரணம், திமுக கூட்டணி ஆகும். இதை புரிந்துகொண்ட மோடி, முதல்வர் ஸ்டாலின் காங்கிரசுக்கான இடங்களை குறைக்க வேண்டும், அல்லது ஸ்டாலின், காங்கிரசை கழற்றிவிட்டு 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டது போல ஸ்டாலினும் போட்டியிட வேண்டும் என்பது மோடியின் விருப்பம்.

இதன் விளைவு தான் 2021 பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் சசிகலா, அமமுகவை இணைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது, அதிமுக அணியை பெரிதாக்கினால் காங்கிரஸ், திமுக அணியில் பெரிய அணியாக மாறிவிடும் என மோடி கணக்குப் போட்டார். அதனால் தான் அதற்கு இசைவு கொடுக்கவில்லை. இப்போதும், ஸ்டாலினுக்கு மோடி கொடுக்கும் முக்கியத்துவத்தை பயன்படுத்தி காங்கிரஸின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றே மோடி விரும்புகிறார்.

இந்திய அரசியலை பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் தங்களது முழுஅதிகாரத்தையும் பயன்படுத்துகின்றனர் என்பது உண்மை. மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது, துணைவேந்தர்களை நியமிப்பது போன்ற அதிகாரங்கள் ஆளுநருக்கு இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இதை முழுமையாக பயன்படுத்தி விடுகின்றனர்.

இது ஆளும் திமுக அரசுக்கு ஒரு நெருக்கடியாகவே இருக்கிறது.

இப்போது கூட மதுரை காமராஜர் பல்கலை, கோவை வேளாண் பல்கலை ஆகியவற்றின் துணைவேந்தர்களை ஆளும் திமுக அரசின் பரிந்துரையின்றி தனது அதிகாரத்தை பயன்படுத்தியே ஆளுநர் நியமித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் அதிகப்படியான மோடி எதிர்ப்பை குறைப்பதன் மூலம் அரசை நடத்தலாம் என முதல்வர் ஸ்டாலின் கணக்கு போடக்கூடும்.

சந்திரபாபு நாயுடு தனது பலத்தை மீறி மோடியை அகற்ற வேண்டும் என முயற்சித்ததன் விளைவு, பாஜக ஆந்திராவில் தன்னையே சுருக்கிக்கொண்டு ஜெகன்மோகன் ரெட்டி மிகப்பெரிய வெற்றியை பெற வழிவகை செய்தது. இதன் விளைவு வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே தெலுங்கு தேசம் வெற்றியைப்பெற்றது. சந்திரபாபு நாயுடு இப்போது, தான் தவறான முடிவை எடுத்துவிட்டதாக வருந்துகிறார்.

இதுபோன்ற சம்பவங்களை கவனிக்கும் ஸ்டாலின் தனது பலத்தை மீறி மோடியை எதிர்க்க வாய்ப்பு இல்லை.

ஆனால், அதேவேளை தமிழக அரசியலைப் பொறுத்தவரை சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவின் வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளது. ஆகையால் மதசார்பின்மை என்னும் அடிப்படையில் இருந்து ஸ்டாலினால் விலகிசெல்வது இயலாத காரியம்.

எனவே, மோடியுடன் டீசன்ஸ் உறவை கடைபிடிக்க முயற்சிக்கிறார். ஸ்டாலினின் இந்த முயற்சி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.

குறிப்பாக மகாராஷ்டிரத்தில் சரத்பவார், உத்தவ்தாக்கரே இருவரும் காங்கிரசுக்கான இடங்களை குறைக்கக்கூடும். இருவருக்கும் பாஜக தயவில் அரசை நடத்தும் வாய்ப்பும் உள்ளது.

குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு தேசிய வாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மேனன், மோடி தொடர்ந்து வெற்றிபெறுகிறார் என்றால் மக்கள் மத்தியில் மோடி அதிகப்படியான செல்வாக்குடன் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பொதுவெளியில் வெளியிட்டுள்ளார்.

அதேபோல, ஜார்க்கண்டிலும் ஹேமந்த் சோரன் காங்கிரஸின் இடங்களை குறைக்கக்கூடும். அடுத்து வரக்கூடிய குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகம் ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் தமிழக காங்கிரசுக்கான இடங்களை முடிவு செய்யும்.

அதேபோல, ஜூன், ஜூலை மாதங்களில் வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பார்க்க வேண்டும். பாஜக சார்பில் பழங்குடியினர் அல்லது இஸ்லாமியர் சமூகத்தை சேர்ந்தவரையே பாஜக நிறுத்தும் வாய்ப்பும் உள்ளது.

கை’ – பலமா? பாரமா?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, முதல்வர் ஸ்டாலின் மதச்சார்பின்மை என்னும் கொள்கையில் உறுதியாக உள்ளார். காரணம் அவரது 45% வாக்கு வங்கியில் 15% சிறுபான்மை பிரிவினர். ஆனால் அதேவேளை காங்கிரசோடு பயணித்தால் அது மத்திய அரசிடம் இருந்து நஷ்டங்களை ஏற்படுத்தும் என்பதையும் ஸ்டாலின் புரிந்து கொண்டுள்ளார்.

மேலும் தேசிய அளவில் காங்கிரஸ் மிகவும் பலவீனமான சக்தியாக மாறிக் கொண்டிருக்கிறது. இதன்பிறகு நடக்க இருக்கும் குஜராத், ஹிமாச்சல், கர்நாடகா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்டாலின் காங்கிரசை குறைக்கவோ அல்லது தனித்து களம் காணும் வாய்ப்பிருக்கிறது. இந்த தமிழ்ப் புத்தாண்டிற்கு கூட ஆளுநர் தை ஒன்றை புத்தாண்டாக ஏற்கமுடியாது எனும் நோக்கிலேயே தேநீர் விருந்து அளித்துள்ளார்.

காங்கிரசுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற ஆளுநர், முதல்வர் மோதல் இங்கு அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

ஏற்கனவே 18 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். அதை போன்று துணைவேந்தர்கள் நியமனத்திலும் தன் விருப்பப்படியே செயல்படுகிறார். ஆகையால் சமாளிப்பது முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சவாலாகவே இருக்கப் போகிறது.