பாஜகவுக்கு எதிரான போராட்டம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய மம்தா பானர்ஜி கடிதம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு செவ்வாய்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைக்க மத்திய அமைப்புகளை பாஜக அரசு பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து இந்த அடக்குமுறை சக்தியை எதிர்த்துப் போராடுவது காலத்தின் தேவை. நாட்டிற்கு தகுதியான ஒரு அரசாங்கத்திற்கு வழிவகுக்க ஒருங்கிணைந்த மற்றும் கொள்கை ரீதியான எதிர்க்கட்சியை வலியுறுத்துவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் ஆளும் பிஜேபியின் நோக்கத்தை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீது பாஜக பலமுறை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த அடக்குமுறை ஆட்சிக்கு எதிர்த்து முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போரட வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ள அவர், நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரின் வசதிக்கும் பொருத்தத்திற்கும் ஏற்ப ஓர் இடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டத்திற்கு வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதித்துறையின் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு எனவும், தற்போது சில பக்க சார்பான அரசியல் தலையீடுகளால் மக்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும் என்றும் கூறியுள்ளார். நீதித்துறை, ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியவை ஜனநாயகத்தின் முக்கியமானத் தூண்களாகும். இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால், மொத்த அமைப்பும் குலைந்து போகும்.

அரசாங்கம் சரியாக செயல்படுவதை உறுதி செய்வதும், எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்படுவதை எதிர்ப்பதும் எதிர்கட்சிகளுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள பொறுப்புகளாகும் என்று அவர் கூறியுள்ளார்.