கோவைக்கு 580 மெட்ரிக் டன் மானிய விலை யூரியா ஒதுக்கீடு

கோவை மாவட்டத்திற்கு 580 மெட்ரிக் டன் அளவில் மானிய விலை யூரியா உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் தற்போது முன் காரிப் பருவ சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்தில் 23 ஆம் தேதியன்று எம்.எப்.எல் நிறுவனம் மூலம் 1225 மெட்ரிக் டன் யூரியாவும், 28 ம் தேதி ஐ.எப்.எப்.சி.ஒ நிறுவனம் மூலம் 1315 மெட்ரிக் டன் யூரியாவும், சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெறப்பட்ட யூரியா உரமானது கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 மெட்ரிக் டன்கள் எம்.எப்.எல் விஜய் யூரியா மற்றும் 80 மெட்ரிக் டன்கள் ஐ.எப்.எப்.சி.ஒ யூரியா அனைத்து வட்டாரங்களிலும் உள்ள கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மானிய விலை உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உர விற்பனை என்பது விவசாயிகளுக்கு ஆதார் அட்டை மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு விவசாயிக்கு ஆதார் அட்டை மூலம் நிலத்தின் அளவுக்கு தக்கவாறு உரம் 10 மூட்டைகள் மிகாமல் வழங்க வேண்டும்.

அனைத்து விவசாயிகளுக்கும் உரம் கிடைக்கும் வகையில் உரம் விற்பனை செய்ய வேண்டும். ஒரே விவசாயி பெயரில் அதிக மூட்டைகள் விற்பனை செய்யக்கூடாது. நில ஆவணங்களான சிட்டா பெற்றபின் பரிசீலித்து கூடுதல் உணவு வழங்கலாம்.

யூரியா உரம் விற்பனையில் முதல் 20 விற்பனையாளர்கள் மாவட்ட கலெக்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் முறைகேடுகள் இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு தங்கள் கடைகள் மூலம் விற்பனை செய்தல் மற்றும் மானிய விலை உரங்கள் வேறு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.

மானிய விலை உரங்கள் விற்பனையில் குறிப்பாக யூரியா உரம் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை.

இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.