பி.ஆர்.நடராஜனுக்கு கோவை மக்கள் பாடம் புகட்டுவார்கள் –  வானதி சீனிவாசன்

கோவை நாடாளுமன்ற உறுப்பினராக நான் என்ன செய்தேன், பட்டியலை படித்துக்கொள்ளுங்கள் என கூறி பி.ஆர்.நடராஜன் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், பாஜக ஆட்சியில் அரசு சொத்துக்களை எல்லாம் விற்று சூறையாடி வருகிறதே தவிர எந்தவொன்றையும் உருவாக்கவில்லை. உருவாக்கப் போவதில்லை. வானதியால்கூட கோவைக்கு இதுவரை பிரதமர் மோடி அரசாங்கம் செய்த ஒரு நல்ல விசயத்தையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அறிக்கை ஒன்றினை வானதி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: டெல்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து, பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு போன்ற ரயில் நிலையங்கள சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் அல்லது கோவையை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டமாக அறிவிக்க வேண்டும், கோவை மாநகருக்கு பாசஞ்சர், சர்க்குலர் ரயில்கள், வடகோவை ரயில் நிலைய விரிவாக்கம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.

ஆனால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு போன்ற தமிழக பகுதிகள், பாலக்காடு கோட்டத்தில் இருப்பதை மறைத்துவிட்டு, ஒட்டுமொத்த கோவை மாவட்டமும், சேலம் கோட்டத்தில் இருப்பது போலவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை எம்.பி.  பி.ஆர்.நடராஜன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், சுமார் 30 ஆண்டுகள் கோவை எம்.பி.யாக இருந்திருக்கின்றனர். இதனை சுட்டிக்காட்டி, கோவை மாவட்டத்தில் ரயில்வே திட்டங்களுக்காக என்னென்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு பதில் அளிக்கிறேன் என்ற பெயரில், மீண்டும் என் மீது விமர்சனங்களை, பி.ஆர்.நடராஜன் வைத்திருக்கிறார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டேன். அதற்கு முன்பாக 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலே, கோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக, நிதி, ஜவுளி, தொழில், வர்த்தகம், நகர்ப்புற வளர்ச்சி, குறு, சிறு, நடுத்தரத் தொழில், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வேளாண்மை என்று பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சர்களை பலமுறை நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன். பலமுறை என்னுடன், தொழில் துறையினரும் உடன் வந்தனர். அவற்றில் பல கோரிக்கைகளை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

எந்தெந்த தேதிகளில், எந்தெந்த மத்திய அமைச்சரை சந்தித்தேன், என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தேன், அவற்றில் எவை நிறைவேறின என்ற தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் எனது டிவிட்டர், பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ளேன். அவை அனைத்தும் இன்றும் உள்ளன.

கொரோனா தடுப்பூசி, ஜிஎஸ்டி வரி குறைப்பு, கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி கல்லூரியில் மாணவர் சேர்க்கை, கோவை – பொள்ளாச்சி – பழனி தற்காலிக வழித்தடம் நிரந்தரமாக்கப்பட்டது, கோவை – மேட்டுப்பாளையம் தினமும் இருமுறை ரயில் வசதி, பாலக்காடு – ஈரோடு, கோவை – பொள்ளாச்சி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு, கோவை – சென்னை தேஜஸ் ரயில், சென்னை – கோவை இன்டர்சிட்டி ரயிலில் புதிய பெட்டிகள், கோவை ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி, வட கோவை ரயில் நிலையத்தில் நடைமேடை, மேம்பாலம் போன்று மத்திய பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ரயில்வே திட்டங்களை, தானே கொண்டு வந்தது போல, நடராஜன் கூறியிருக்கிறார். இந்த கோரிக்கைகளை அனைத்தையும் நிறைவேற்றியிருப்பது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்த கோரிக்கைகளை பல ஆண்டுகளாக பாஜக வலியுறுத்தி வருகிறது.

8.9.2021 அன்று சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது, மத்திய பாஜக அரசின் சீர்மிகு நகரத் திட்டத்தில் (Smart City) கோவை மாநகரில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், கோவை தெற்கு தொகுதியில், வாகன நெருக்கடி மிகுந்த டிகே மார்க்கெட், டவுன் ஹால் சாலை ஆகிய இடங்களில் பலஅடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி, குளங்கள் சீரமைப்பு பணிகள் குறித்தும் கேள்வி எழுப்பினேன். அதற்குப் பதிலளித்த, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, “கோவை தெற்கு தொகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. 10 ல் 9 குளங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணி முடிக்கப்படும்” என தெரிவித்தார். இவை அனைத்தும் மோடி அரசின் திட்டங்கள்.

சட்டமன்றத்தில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கோவை மெட்ரோ ரயில் திட்டம், தங்கநகை தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள், Cluster அமைக்க வேண்டும், கோவை மத்திய சிறையையொட்டிய பகுதியில் பூங்கா, தமிழக விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து தகவல்களை அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய், முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, மத்திய பாஜக அரசின் உஜ்வாலா 2 திட்டத்தின் கீழ், ஆதார் எண் இல்லாமலேயே Self Declaration மூலம் சமையல் எரிவாயு இணைப்பை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும், தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னாருக்கு பாலம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு மீண்டும் ஆதிதிராவிடர் மக்களுக்கே வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், பெண்களுக்கென தனி பட்ஜெட் (Gender Budget), கோவை மாநகருக்கான முதன்மைத் திட்டத்துடன் (Master Plan) ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல திட்டமிடல் ஆணையத்தையும் (Regional Planning Authority) இணைத்து ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன்.

எம்.எல்.ஏ.வான பிறகு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் முதல் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகராட்சி ஆணையர் என்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து கோவை தெற்கு தொகுதிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கோவை மக்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறேன்.

பாதுகாப்பு தொழில் வழித்தடம் (Defence Corridor), சீர்மிகு நகரங்கள் திட்டம் (Smart City), நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அம்ருத் திட்டத்தின் கீழ் பாதாளச் சாக்கடை பணிகள், சாலைகள், மேம்பாலங்கள் என எண்ணற்ற திட்டங்கள் மத்திய பாஜக அரசின் சார்பில் கோவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியவர், எல்லாம் தங்களால் தான் நடந்தது என்று மக்களை ஏமாற்றுவதற்காக, விளம்பர அறிக்கை வெளியிட்டு வருகிறார். பிரதமர் மோடி அரசு, செய்ததை எல்லாம், தாங்கள் செய்ததாக பட்டியல் போட்டு விட்டு, கோவைக்கு இதுவரை, பிரதமர் மோடி செய்த ஒரு நல்ல விஷயத்தை சொல்ல முடியுமா? என கேட்டிருப்பதற்கு கோவை மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.