இரத்தினம் கல்விக் குழுமத்தில் மகளிர் தின விழா

இரத்தினம் கல்விக் குழுமத்தில் “மிளிர்” என்ற தலைப்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரத்தினம் கல்வி குழுமங்களின் செயல் அதிகாரி சீமா செந்தில் தலைமை தாங்கினார். இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் துணை முதல்வர் கீதா முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், இந்த ஆண்டின் மகளிர் தினவிழாவின் மையக்கரு “இன்றைய பாலின சமத்துவமே நிலையான எதிர்கால வளர்ச்சி” என்பதாகும். இதை நோக்கியே நம்முடைய அரசு செயல்படுகிறது. அனைத்து துறைகளிலும் பெண்கள் தனது முத்திரையை பதித்து வருகின்றனர். ஆணுக்கு பெண் சரிசமம் என்ற வார்த்தை மெய்யாகி வருகின்றது. அது போல எதிர்கால இந்தியா வல்லரசாக பெண்களின் பங்கு பெருமளவில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் இந்த ஆண்டில் பல்வேறு துறையில் சிறப்பாக செயல்பட்ட சாதனைப் பெண்மணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த பெண்மணி விருது தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.