மிளகாய் வற்றல் விலை கிலோ ரூ.120: தமிழ்நாடு வேளாண் பல்கலை கணிப்பு

மிளகாய் வற்றலின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 110/ முதல் ரூ.120/-வரை இருக்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை கணித்துள்ளது.

மிளகாய் பயிரிடும் முக்கிய மாநிலங்களாக ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவை உள்ளன.

மிளகாயின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக ஊட்டச்சத்து மருந்து தொழிற்சாலைகளில் மிளகாய்க்கு எப்போதும் அதிக தேவைகள் உள்ளன. சீனா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து அதிக ஏற்றுமதி தேவைகள் இருந்து வருவதாலும், வர்த்தகர்களின் அதிக கொள்முதல் நோக்கத்தாலும், ஆந்திரபிரதேசத்தில் வைரஸ் நோய் தாக்கத்தால் உற்பத்தி குறைந்துள்ளதாலும், மிளகாய் பயிர் உற்பத்தி செய்யும் சில பகுதிகளில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டதாலும் மற்றும் முன் பேர சந்தையில் மிளகாய் வர்த்தகத்திற்கான தற்காலிக தடை ஆகியவற்றாலும் வரும் மாதங்களில் மிளகாய் வற்றல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் மிளகாய் பயிரிடப்படுகின்றது. இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் பயிரிடப்படுகின்றது. உள்ளூர் வரத்து ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் அறுவடை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் – விலை முன்னறிவிப்புத் திட்டம் சந்தையில் நிலவிய மிளகாய் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வுகளின் அடிப்படையில், அறுவடையின் போது தரமான (சம்பா) மிளகாய் வற்றலில் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 110/ முதல் ரூ.120/-வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூலை வரை வரும் மிளகாய் வற்றலின் வரத்தைப் பொருத்து விலையில் மாற்றங்கள் இருக்கும்.

Source: Press Release