கோவை வரலாற்றில் முதல்முறையாக மேயர் பதவி வகிக்கும் திமுக

யார் அந்த அதிர்ஷ்டசாலி?

உள்ளாட்சித் தேர்தல் முடிவு ஒரு பார்வை!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக கூட்டணி மாநகராட்சிகளில் 80 சதவீத வெற்றிகளையும், நகராட்சியில் 70 சதவீத வெற்றிகளையும், பேரூராட்சிகளில் 65 சதவீத வெற்றிகளையும் பெற்றுள்ளன. அதிமுகவைப் பொறுத்தவரை 15 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. மறைமுகத் தேர்தலாக நடந்தது திமுகவுக்கு மிகப்பெரிய லாபமாக இருந்தது.

நகர்ப்புறத்துக்கு மட்டுமே நடந்த தேர்தல் என்பதாலும், மறைமுகத் தேர்தல் என்பதாலும் இதன் முடிவுகளை ஒட்டுமொத்த தமிழகத்துக்கான முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், அதேவேளையில் தமிழக அரசியலின் எதிர்கால போக்கு குறித்த சில ரேகைகளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

குறிப்பாக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கே.என்.நேரு ஆகிய இருவரும் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த கோவை, சென்னை மாநகராட்சி களில் மிகப்பெரிய வெற்றியை திமுகவுக்கு பெற்றுத் தந்ததை அக்கட்சியினர் மிகப்பெரிய சாதனையாக பார்க்கின்றனர். அதிமுகவைப் பொறுத்தவரை பாஜக இன்றி திமுகவை எதிர்கொள்வது சிரமம் என்ற சூழல் உருவாகியுள்ளன.

பாஜக இல்லாமல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, தென்சென்னை, மத்திய சென்னை, மதுரை ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளில் திமுகவை, அதிமுகவால் எதிர்கொள்ள இயலாது என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த பகுதிகளில் பாஜகவின் வாக்கு வங்கி அபரிமிதமாக உயர்ந்துள்ளது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த அளவுக்கு வாக்கு வங்கி உயர்வதற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக செய்து வரும் அரசியல் நகர்வுகள் தான் முக்கியக் காரணம். 2004 மக்களவைத் தேர்தலுக்குப் பின் கூட்டணியின்றி தவித்துக் கொண்டிருந்த பாஜகவுக்கு, அதிமுக கூட்டணி கிடைத்தது. அத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டாலும் கூட 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்கு வங்கியை எட்டுவதற்கு உந்து சக்தியாக இருந்தது பாஜக தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம் போன்ற வடமாநிலங்களில் இந்து ஒற்றுமை அடிப்படையை மையமாக வைத்து சமூக ரீதியான கட்டமைப்பு செய்து வாக்கு வங்கியை உயர்த்துவது போல தமிழகத்திலும் சப்தமின்றி சமூக ரீதியாக வாக்கு வங்கியை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது பாஜக.

கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் வாக்கு வங்கியை குறிவைத்து மாநிலத் தலைவராக எல்.முருகனை நியமித்தது, பின்னர் மத்திய அமைச்சர் பதவி வழங்கியது, கொங்கு வேளாளர் மற்றும் பிற சமூகங்களில் இருக்கும் படித்த இளைஞர்களை கவரும் வகையில் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இளம் ஐபிஎஸ் அதிகாரியான கே.அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவியை வழங்கியது, தென்மாவட்டங்களில் திராவிட கட்சிகளால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தேவேந்திரகுல வேளாளர்களுக்கு அவர்களது சமூகப் பெயர் மாற்றத்துக்கு உதவியது உள்ளிட்ட வாக்கு வங்கியை உயர்த்த உதவும் பல்வேறு சமூக ரீதியான அசைவுகளை பாஜக செய்துகொண்டே இருக்கிறது.

காலம் காலமாக திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அதிமுகவுக்கு வாக்களித்து வந்த பிராமணர்கள், ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பதை உணர்ந்து, அச்சமூக வாக்குகளையும் இந்த முறை பெரும்பான்மையாக கவர்ந்திழுத்திருக்கிறது பாஜக.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தென்மாவட்டங்கள், கொங்கு மண்டலம் மற்றும் தென்சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் பாஜக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மாமன்ற, நகர்மன்ற, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ளது.

தேவேந்திரகுல வாக்கு வங்கி:

கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள ஹிந்து நாடார்கள் பாஜக தொடங்கப்பட்ட காலம் முதலே அக்கட்சிக்கு வாக்களித்து வருகின்றனர் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், இப்போது அதை தாண்டியும் ஹிந்து நாடார் வாக்கு வங்கி பாஜகவை நோக்கி நகர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாநகராட்சியில் ஒரு மாமன்ற உறுப்பினர் பதவி, திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, பணக்குடி, முக்குடல், வடக்கு வள்ளியூர், தூத்துக்குடி மாவட்டத்தில் கானம், தென்திருப்பேரவை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் பாஜக குறிப்பிடத்தக்க பேரூராட்சி உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் 9 சதவீத வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இது தேவேந்திரகுல வேளாளர், ஹிந்து நாடார் சமூக வாக்குகள் பங்களிப்பு இன்றி இந்த அளவுக்கு பாஜகவால் வாக்கு வங்கி பெற முடியாது என்பதே உண்மை.

அதேபோல, தேவேந்திர குல வேளாளர்கள் பாஜகவின் வாக்கு வங்கியாக மாறியிருக்கின்றனர் என்பதற்கான சான்றுகளும் தேர்தல் முடிவில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், ஸ்ரீவைகுண்டம், தென்காசி மாவட்டத்தில் சாம்பவர் வடகரை, எஸ்.புதூர், மேலகரம், வடகரை கீழ்பிடாகை, கமுதி பேரூராட்சிகள், ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சிகளிலும் இந்த முறை பாஜக தடம் பதித்துள்ளது. கடலூர் மாநகராட்சியில் ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்ட 28 வது வார்டில் அதிமுக, காங்கிரசை டெபாசிட் இழக்க வைத்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது தாமரை சின்னம் என்பதை பார்க்கும்போது வடதமிழகத்திலும் பாஜக வளருவதற்கான அடித்தளம் உருவாகியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது.

திரண்ட பிராமணர் வாக்கு வங்கி:

அதேபோல, ஜெயலலிதா மறைவுக்குப் பின் இரட்டை இலையை தவிர்த்துவிட்டு, தாமரைக்கு இந்த முறை பிராமணர்களும் ஒன்று திரண்டு வாக்களித்துள்ளனர். பிராமணர்கள் பெரும்பான்மையாக உள்ள சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளதே இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

மேலும், சென்னை மாநகராட்சியில், தென்சென்னை மக்களவைத் தொகுதி மற்றும் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 19 வார்டுகளில் பாஜக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சென்னை மாநகராட்சியில் 8 சதவீத வாக்குகளையும் பாஜக பெற்றுள்ளது. அதேபோல, ஸ்ரீரங்கம் நகராட்சியில் 1, 2 வது வார்டுகளில் 2 வது இடத்தை பாஜக பிடித்துள்ளது.

கொங்கு மண்டலம்:

இதேபோல, கொங்கு மண்டலத்தில் வெற்றிகளை பெற முடியாவிட்டாலும், பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாகவே உயர்ந்துள்ளது. குறிப்பாக கோவை மாநகராட்சியில் 9 சதவீத வாக்கு வங்கி பெற்றது, திருப்பூர் மாநகராட்சியில் 2 மாமன்ற உறுப்பினர்களை கைப்பற்றியதுடன் ஒரு வார்டில் 2 வது இடத்தையும் பெற்றது, ஈரோடு மாநகராட்சியில் வார்டுகளை கைப்பற்றாவிட்டாலும் 2011 உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிடும் போது பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்திருப்பது, திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளில் சுமார் 6 சதவீதம் பெற்றுள்ளது உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது கொங்கு மண்டலத்தில் பாஜக ஆழமாக வேரூன்றி வளரத் தொடங்கியிருப்பதை உணரலாம்.

கொங்கு மண்டலத்தில் 2011 முதல் இதுவரை நடந்துள்ள சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல் இவற்றை முழுமையாக ஆய்வு செய்தால் தொடர்ந்து 2019 க்கு பிறகு பாஜகவின் வாக்கு வங்கி சீராக உயர்ந்து வருகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

நாம் தமிழர் கட்சி:

மாநிலம் முழுவதும் சீரான வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் ஒன்மேன் ஆர்மி என்ற அடிப்படையில் தான் இயங்குகிறது. உள்ளூர் செல்வாக்கு மிகுந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் இல்லாததால் அக்கட்சியால் உள்ளாட்சித் தேர்தல்களை குறிப்பாக உள்ளாட்சியில் மறைமுக தேர்தலை எதிர்கொள்வது மிகப்பெரிய சிரமமாகவே இருந்தது என்பதை இத்தேர்தல் முடிவு காட்டுகிறது.

2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒரே ஒரு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி தான் கிடைத்தது. ஆனால், அடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு 6.85 சதவீத வாக்கு வங்கி கிடைத்தது. அதேபோல இந்த முறை 6 பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து அக்கட்சி பெற்றுள்ளது. மீண்டும் ஒரு பொதுத் தேர்தலில் தான் அக்கட்சியின் பலத்தை கணக்கிட முடியும்.

பாமக:

இக்கட்சி நகர்ப்புறத்தில் செல்வாக்கு கொண்ட கட்சி அல்ல. காரணம், 2011 உள்ளாட்சித் தேர்தலில், நகர்புற உள்ளாட்சிகளில் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆகையால் பாமகவுக்கு சிறு சறுக்கல் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால், பாமக தனது வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அதிமுகவிடம் இழந்துள்ளது என்பதே உண்மை. இது அடுத்து வரும் பொதுத்தேர்தல்களில் அதிமுகவுடன் இணைந்து பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

வன்னியர்கள் அதிமுகவை தங்களது சொந்த கட்சியாக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. தருமபுரி நகராட்சியில் அதிமுக வலுவான போட்டியை கொடுத்து பாமக அங்கு வீழ்ந்துள்ளதே இதற்கு சிறந்த உதாரணம். பாமகவை பொறுத்தவரை 5 மாநகராட்சி உறுப்பினர்கள், 48 நகர்மன்ற உறுப்பினர்கள், 73 பேரூராட்சி உறுப்பினர்கள் என 128 பதவிகளை பெற்றுள்ளது. அக்கட்சிக்கு என சாதிய பலம் இருப்பதால் தான் ஓரளவாவது இக்கட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக்குப் பிடித்துள்ளது.

அமமுக:

3 மாநகராட்சி உறுப்பினர்கள், 33 நகர்மன்ற உறுப்பினர்கள், 66 பேரூராட்சி உறுப்பினர்கள் என 102 பதவிகளை கைப்பற்றியுள்ளது. மேலும், ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. அங்கு 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பேரூராட்சித் தலைவராக இருந்த சேகர் செல்வாக்கானவர் என்பதும், அப்பகுதியில் அவருக்கு நல்ல பெயர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற செல்வாக்கு மிக்க நபர்கள் அமமுகவில் இருப்பதும், டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் சாதிய பலத்துடன் அமமுகவுக்கு வாக்குகள் கிடைப்பதும் ஓரளவு பதவிகளை பெற காரணம்.

தேமுதிக, ம.நீ.ம:

தேமுதிகவை பொறுத்தவரை 33 உறுப்பினர் பதவிகளை பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை நகர்ப்புற கட்சியாகவும், நடிகர் கமல்ஹாசன் என்ற ஒற்றை பிம்பத்தை நம்பியே அக்கட்சி நகர்கிறது என்பதும் தெரிந்த உண்மை. இந்த தேர்தலில் பூஜ்ஜியம் பெற்றிருந்தாலும், கமலின் அரசியல் ராஜ்ஜியத்துக்கு இத்தேர்தல் முற்றுப்புள்ளியாக இருக்கும் என சொல்ல இயலாது. காரணம், 2024 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளில் கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் கிடைக்கும்.

தனித்து நின்ற கட்சிகளில் பதவிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது பாமக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என்பதே உண்மை. இந்த தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால் 2024, 2026 பொதுத்தேர்தல்களில் அதிமுக அதிகாரத்துக்கு வரும் அளவுக்கு வெற்றியை பெற வேண்டுமெனில் பாஜக, பாமக ஆகியவற்றை அரவணைத்து செல்வது மிகவும் அவசியம் என்பதையே உணர்த்துகிறது. அதேபோல, நடிகர் கமலின் ம.நீ.ம, டிடிவி. தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளுக்கும் இனிவரும் பொதுத் தேர்தல்களில் திமுக, அதிமுக கூட்டணியில் வலிமையை உயர்த்தும் வாய்ப்பு கிடைக்கும்.

சென்னைக்கு அடுத்து எல்லை அளவிலும், வருவாய் அளவிலும் கோவை தான் பெரிய மாநகராட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தின் முக்கிய நகராக கோவை திகழ்வதால் இம்மாநகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்ற முக்கிய அரசியல் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும்.

கோவை மாநகராட்சி மேயர் பதவியை இதுவரை திமுக அலங்கரித்தது இல்லை. 1996, 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி இம்மாநகராட்சியை கைப்பற்றிய போதும் 1996 இல் தமாகா கட்சிக்கும், 2006 இல் காங்கிரசுக்கும் இம்மாநகராட்சியின் மேயர் பதவி ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே 2001, 2011 ஆம் ஆண்டுகளில் இங்கு மேயர் பதவியை அதிமுக அலங்கரித்தது. இந்நிலையில் 2021 பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் திமுக பெரும்பான்மை இடங்களில் கைப்பற்றியபோதும், கொங்கு மண்டலத்தில் பின்னடைவை சந்தித்தது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு கோவையின் பொறுப்பு அமைச்சராக பணியமர்த்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒரு லட்சம் பேரிடம் மனுக்கள் வாங்கி அவற்றுக்கு தீர்வுகண்டது, மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டது என பல்வேறு உத்திகளை கையாண்டார். இதற்கு கைமேல் பலன் கிடைக்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் 96 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி மிகப்பெரிய சாதனை படைத்தது.

கோவையில் திமுக தனித்து பெரும்பான்மை மாமன்ற உறுப்பினர் பதவிகளை கைப்பற்றிய நிலையில் திமுகவில் இருந்து தான் புதிய மேயர் தேர்வு செய்யப்படவுள்ளார். இதனால், முதல் திமுக மேயர் யார் என்பதை அறிய கொங்கு மண்டலமே காத்திருக்கிறது. கோவை மேயர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பதால் புதிய மேயருக்கான போட்டியில் மூன்று பெண்கள் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

22 வயதில் மாமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள நிவேதா சேனாதிபதி, முன்னாள் துணை மேயரும், கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரின் மனைவியுமான இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 4 முறை மாமன்ற உறுப்பினர் என்ற அனுபவத்துடன் மீனா லோகு ஆகிய மூவரில் ஒருவரே கோவை மேயராக வரக்கூடும் என்கின்றனர் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள்.

மார்ச் 4ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர், உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இப்போதே பரபரப்பு அதிகரித்து வருகிறது.

இலக்குமி இளஞ்செல்வி:

இதேபோல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் துணை மேயரும், திமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வியும் மேயர் ரேஸில் பிரதான இடத்தில் இருக்கிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மகேந்திரனால் தனது வெற்றிவாய்ப்பை சிங்காநல்லூரில் இழந்த கார்த்திக், அமைச்சராகும் வாய்ப்பையும் நழுவவிட்டார்.

இந்நிலையில் இந்த முறை தனது மனைவி இலக்குமி இளஞ்செல்வியை கோவை மேயராக்குவது என்ற தீர்மானத்தோடு காய் நகர்த்தி வருகிறார். கார்த்திக்கின் மனைவி கோவை மாநகராட்சி 52 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். நாயுடு சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு கொடுத்தால் கட்சியை பலமாக வளர்க்க முடியும் என்ற குரலும் கோவையில் இருந்து சென்னை அறிவாலயம் நோக்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் 21 மாநகராட்சிகளிலும் மேயர் பதவியை கட்சித் தலைமையே முடிவு செய்ய இருப்பதால் கோவை மேயரையும் முதல்வர் ஸ்டாலின் தான் இறுதி செய்வார். கோவைக்கு இளவயது மேயரை தேர்வு செய்யப்போகிறாரா, அனுபவம் அடிப்படையில் மீனா லோகுவுக்கு வாய்ப்பு கிடைக்குமா, சமூகப் பார்வையில் இலக்குமி இளஞ்செல்விக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மீனா லோகு:

கோவை மாநகராட்சி 46 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள மீனா லோகு ஏற்கனவே மூன்று முறை மாமன்ற உறுப்பினராக இருந்தவர். முதுகலை தமிழ் ஆசிரியர் பணியை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். இதனால் இவரது பெயர் மேயர் பதவிக்கான பரிசீலனையில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

முதலியார் சமூகத்தை சேர்ந்த அவர், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த லோகுவை காதல் திருமணம் செய்தவர். பலமுறை மாமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளதால் நிர்வாக நடைமுறையை இவரால் எளிதில் கையாள முடியும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

நிவேதா சேனாதிபதி:

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகளான நிவேதா சேனாதிபதி 97 வது வார்டில் போட்டியிட்டு 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனி பறித்திருக்கிறார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை உளவியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிவேதா மேயர் ரேஸில் முந்துகிறார். இளம் வயது உடைய இவரை மேயர் பதவியில் அமர்த்தினால் இளம் தலைமுறை வாக்காளர்களை திமுகவால் கவர முடியும். இளம் பெண் அரசியல்வாதியை உருவாக்கினால் கோவையில் நீண்ட காலம் அரசியல் செய்ய வசதியாக இருக்கும் என்றும் கட்சித் தலைமைக்கு பெருவாரியான நிர்வாகிகள் ஓங்கி குரல் கொடுத்து வருகின்றனர்.