காப்பகத்தில் உள்ள குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்ற தன்னார்வலர்கள்

கோவையில் உள்ள சரணாலயம் என்ற காப்பகத்தில், உள்ள 15 குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் குழந்தைகளை விமானத்தில் பறக்கவைத்து அழகு பார்த்துள்ளனர் தன்னார்வலர்கள்.

கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பை சார்ந்த தன்னார்வலர்கள், 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வருகின்ற, சரணாலயம் என்ற காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக குழந்தைகளிடம் அவர்களின் ஆசைகளை கேட்டறிந்த பொழுது பல குழந்தைகள் வானில் பறக்க வேண்டும், விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று அந்த குழந்தைகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றனர். தன்னார்வலர் திப்பேந்தர் சிங் கூறுகையில், “காப்பகத்தில், உள்ள அனைத்து குழந்தைகளும், தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். குழந்தைகளுக்கு அளிக்கும் எந்தவொரு கருணைச் செயலும் வீணாகாது.” என்றார்.