தேர்தல் மறைமுகமாக இருந்தாலும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக முதல்வரும், தி.மு.க-வின் தலைவருமான ஸ்டாலின் உள்ளாட்சியிலும் நல்லாட்சி உறுதியாக மலரும் என தி.மு.க கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் சுருக்கம்:

“வாக்கு எண்ணிக்கை மையங்களில் அ.தி.மு.க.வினர் எந்த அளவுக்கு எல்லை மீறிச் செல்வார்கள் என்பதை அ.தி.மு.க ஆட்சியில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது நேரில் கண்டு அறிந்தவன் நான். அதே வழியை அவர்கள் இப்போது கையாண்டாலும் நாம் அமைதி வழியையே கையாள வேண்டும்.

முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அவர்கள் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்.

வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களைக் கொண்டு மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகர்மன்றங்களுக்கான தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள். தேர்தல் முறை, மறைமுகமாக இருந்தாலும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சி அமைந்தால்தான் உள்ளாட்சி ஜனநாயகம் மலரும் என்ற நல்ல நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்தனர். கடைக்கோடி மனிதரும் ஜனநாயகத்தின் நிழலில் இளைப்பாறிட வேண்டும். மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக நிறைவேற்றவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. மனதில் கொள்ளுங்கள்! மக்கள் உறுதியாக நம் பக்கம். அவர்களின் சிதையாத நம்பிக்கைக்குரியவர்கள் நாம். நாளை விடியும்! உதயசூரியன் உலா வரும்! உள்ளாட்சியிலும் நல்லாட்சி உறுதியாக மலரும்!” என முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ளார்.