இயற்கை விவசாயம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

கோவை பிரஸ் காலனி புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு விதைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கோவையை அடுத்த பிரஸ்காலனி பகுதியில் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியின் தாளாளராக இருப்பவர் அரவிந்தன். இயற்கை மீது கொண்ட ஆர்வத்தால் இவரது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயங்கள் குறித்து தனியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவர், பள்ளி வளாகத்தில் பல்வேறு இயற்கை விதைகளை பயன்படுத்தி காய்கறி தோட்டங்களையும் உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில் கோவையை சுற்றி உள்ள இயற்கை ஆர்வலர்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு விதைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை கார்டனர்ஸ் மீட் எனும் சந்திப்பு நிகழ்ச்சி பிரஸ் காலனி பகுதியில் உள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

பள்ளியின் முதல்வர் பாஸ்கர் ஒருங்கிணைத்த இதில், பள்ளியின் தாளாளரும் இயற்கை ஆர்வலரும் ஆன அரவிந்தன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கோவையை சுற்றியுள்ள இயற்கை ஆர்வலர்கள், மாடித்தோட்டம் வைத்து பராமரிப்பவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் நாட்டு விதைகளின் பயன்களும் அதனை அழியாமல் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் விதைகள் வழங்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்தன், கடந்த ஏழு வருடங்களாக நாட்டு விதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறினார். இலவசமாக நாட்டு விதைகளை பலருக்கும் வழங்கி வருவதாக தெரிவித்தார். இயற்கை விவசாயத்தை அழியாமல் பாதுகாப்பது மற்றும் நாட்டு விதைகளை பற்றிய பயன்களை அனைவரிடமும் எடுத்து கூறுவதே இந்த கூட்டத்தின் நோக்கம் எனவும், எதிர்காலத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இயற்கை ஆர்வலர்களை ஒன்று திரட்டி இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த போவதாக நம்பிக்கை தெரிவித்தார்.