பப்புவா நியூ குனியாவின் இந்திய வர்த்தக ஆணையராக கோவையை சேர்ந்த விஷ்ணு பிரபு நியமனம்

பப்புவா நியூ குனியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையராக கோவையை சேர்ந்த விஷ்ணு பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் செஞ்சி மஸ்தான் முன்னிலையில், பப்புவா நியூ குனியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக விஷ்ணு பிரபுவை, பப்புவா நியூ குனியா நாட்டின் தூதர் பவுலிஸ் கோர்னியா முன்னிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விமான மார்க்கமாக கோவை வந்தடைந்த விஷ்ணு பிரபுவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு பிரபு கூறுகையில், பப்புவா நியூ குனியா நாட்டின் வர்த்தக ஆணையராக என்னை நியமனம் செய்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். பப்புவா நியூ குனியா நாடு, அதிக அளவில் தங்கம் உற்பத்தியாகும் நாடாக உள்ளது என்றும் அந்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் ஒரு பாலமாக இருந்து, இரு நாட்டின் வர்த்தகத்தை பெருக்குவது தன்னுடைய பணியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஈரான், ஈராக் எப்படி எண்ணைய் வளம் மிக்க நாடோ, அதோபோன்று தங்க வளம் மிக்க நாடாக பப்புவா நியூ குனியா நாடும் இருந்து வருகின்றது. அங்கு இருக்கும் தங்கங்களை இந்திய நாட்டில் வர்த்தகம் செய்வதன் மூலமாக நமது நாட்டில் பலருக்கு வேலைவாய்ப்பும், வர்த்தகமும் பெருகும். ஏனெனில் உலக அளவில் 11 % மக்கள் தங்க நகைகளை பயன்படுத்துவது இந்தியர்கள் தான். எனவே அந்த நாட்டிற்கும் இந்திய நாட்டுக்கும் தங்கத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தி தொழில் வளத்தை பெருக்க பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.