கே.எம்.சி. ஹெச்  மருத்துவமனைக்கு 3 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம்  கொண்டுவரப்பட்ட உடலுறுப்பு வெற்றிகரமாக நோயாளிக்கு பொருத்தி சாதனை

மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து கோவை கே.எம்.சி. ஹெச்  மருத்துவமனைக்கு சுமார் 3 மணி நேரத்தில் சாலை வழியாக கல்லீரல் கொண்டுவரப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (45வயது ). இவர் மே 13-ம் தேதி தனது கணவருடன்  இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபொழுது எதிர்பாராவிதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி மே 18 அன்று மூளை சாவு ஏற்பட்டது.

இந்த நிலையில், செல்வி  குடும்பத்தினர் உடல் உறுப்புகளை  தானம் செய்ய முன் வந்தனர். மே 19-ம் தேதி காலை அவரது கல்லீரல், மதுரையிலிருந்து சாலை வழியாக கோவை கே.எம்.சி. ஹெச்  மருத்துவமனைக்கு சுமார் 3 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு  கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில்  உள்ள  கல்லீரல் நோயாளிக்கு  வெற்றிகரமாக  பொருத்தப்பட்டது.

மதுரையிலிருந்து சாலை வழியாக உடல் உறுப்பினை கொண்டுவரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாரு மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட காவல்துறையினர் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து, கோவை கே.எம்.சி. ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல.ஜி. பழனிசாமி கூறுகையில், ” மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் உறுப்பினை கொண்டு வருவது சாத்தியம் அல்ல. ஆனால், காவல்துறை உதவியுடன் இது சாத்தியமாகி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட காவல்துறையினருக்கும், உடல் உறுப்புகளை தானமாக தர முன்வந்த செல்வி  குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.