மீன்பாசி குத்தகையில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

கோவையில் உள்ள நீர் நிலைகளில் மீன்பாசி குத்தகையை பொது ஏலம் விட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், மீன்பாசி குத்தகை ஏலத்தில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழக்கம்போல முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில்: தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மீன் பிடிக்கத் தகுதியான நீர்நிலைகளில் மீன்பாசி குத்தகை அளிப்பதில் தமிழகத்தில் உள்ள மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை 17-11-1993-ல் வெளியிட்ட அரசாணை எண் 332-ன்படி மீன்பாசி குத்தகையில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசு நிர்ணயிக்கும் குத்தகைத் தொகையை செலுத்தி நீர்நிலைகளில் மீன்களை வளர்த்து விற்பனை செய்து வந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கடந்த 22 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில், நீர் நிலைகளில் மீன்பாசி குத்தகையை பொது ஏலம் விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக கோயமுத்தூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பாலமுருகன், கோவை தெற்கு தொகுதியில் உள்ள மீனவ சமுதாய மக்களும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை வட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் மீன்பாசி குத்தகை பொது ஏலம் விடப்பட்டால் இந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 761 மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். கொரோனா பொதுமுடக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்களை, மீன்பாசி குத்தகை பொது ஏலம் விடப்படும் என்பது மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என சுட்டி காட்டப்பட்டுள்ளது.

எனவே, மீனவர்களின் நலன் கருதி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நீர்நிலைகளில் மீன்பாசி குத்தகை ஏலத்தில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழக்கம்போல முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.