பெண்ணின் திருமண வயதை உயர்த்த ஆய்வு செய்யும் குழுவில் ஒரேயொரு பெண் எம்.பி

இந்தியாவில் 110 பெண் எம்.பிக்கள் இருக்கிறார்கள் என்றும், ஆனால் இந்தியாவின் ஒட்டுமொத்த இளம் பெண்கள் தொடர்பான மத்திய அரசின் ஒரு முக்கிய முடிவில் அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான நாடாளுமன்ற ஆய்வுக் குழுவில் 30 ஆண் எம்.பி.க்களுடன் ஒரேயொரு பெண் எம்.பி மட்டுமே உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான உரிமையைத் தொடர்ந்து ஆண்களே தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் பெண்கள் வெறும் பார்வையாளர்களாகவே தொடர்கின்றனர் என்வும் அவர் கூறியுள்ளார்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா பற்றிய விவாதங்களில் பெண் எம்.பி க்களின் பங்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் குழந்தைத் திருமணத் தடைத் திருத்தச் சட்டம் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்து பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதைச் சட்டமாக்க முன்மொழிந்தது.

இதில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தத் தெரிவிக்கப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலைக்குழுவின் தலைவராக பாஜக மூத்த தலைவர் வினய் சஹாஸ்ரபுத்தே நியமிக்கப்பட்டுள்ளார். 31 எம்.பி.க்கள் கொண்ட குழுவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ் என்ற பெண் எம்.பி. மட்டுமே இடம் பெற்றுள்ளார். மீதமுள்ள 30 எம்.பி.க்களும் ஆண்கள்.

இதுகுறித்து தினத்தந்தி இணைய தள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த தகவல்

ஒரேயொரு பெண் எம்.பி இடம்பெற்றது குறித்து எம்.பி. சுஷ்மிதா தேவ் கூறுகையில், “பெண்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க நிலைக்குழுவில் கூடுதலாக பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் பெண்களின் நலன் சார்ந்த அனைத்து விஷயங்களும் பேசப்படும்” எனத் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே கூறுகையில், “பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், விவகாரங்கள் எழும்போது அது குறித்துப் பங்கேற்கவும், விவாதிக்கவும் நாடாளுமன்றக் குழுவில் அதிகமான பெண் எம்.பி.க்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்கு மக்களவை, மாநிலங்களவைத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அதிகமான பெண் எம்.பி.க்கள் இருந்தால்தான் பல்வேறு விஷயங்களை விவாதிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.