அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய வேலுநாச்சியாரின் ஆளுமை வியப்பிற்குரியது – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனையான ராணி வேலுநாச்சியாரின் 282 வது பிறந்த நாள் இன்று (ஜன. 3) கொண்டாடப்படுகிறது. அவரை நினைவு கூறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதியின் மகளான வேலுநாச்சியார் 1730 ஜனவரி 3ல் பிறந்தார். பெண்ணாக பிறந்தாலும் ஓர் ஆண் வாரிசாகவே வளர்க்கப்பட்டார். கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து போர் திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலம், ஃபிரென்சு, உருது போன்ற பல மொழிகளையும் கற்றார்.

1746 ஆம் ஆண்டு தனது 16 வது வயதில் வேலுநாச்சியார் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாத பெரியவுடையனத் தேவருடன் திருமணம் நடந்தது.

வடுகநாதர், ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேயப் படை சிவகங்கை மீது போர் தொடுத்தன. காளையர் கோவிலில் இருந்த வடுகநாதரை ஆங்கிலேயே படை கொன்று காளையர் கோவிலை கைப்பற்றியது.

முத்து வடுகநாதர் கொல்லப்பட, சிவகங்கை சீமை ஆங்கிலேயர்கள் கைவசம் சென்றது. 7 ஆண்டுகாலம் திண்டுக்கல், விருப்பாட்சி போன்ற பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்த வேலு நாச்சியார் அங்கிருந்தபடியே சிவகங்கை மக்களை ஒன்றுதிரட்டி, மைசூர் மன்னர் ஹைதர் அலியின் படைகளின் ஆதரவுடன் மீண்டும் சிவகங்கை வந்து ஆங்கிலேயப் படையுடன் போராடி இழந்த தனது அரசை மீண்டும் மீட்டார் ராணி வேலுநாச்சியார். பெரும் போராட்டங்கள் நடத்தி தனது நாட்டை மீட்டெடுத்த ராணி வேலுநாச்சியார் டிசம்பர் 25 1796 அன்று மறைந்தார்.

சிவகங்கை சூரக்குளம் என்ற கிராமத்தில் ராணி வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் சிவகங்கை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.