டெல்லி பல்கலையில் தமிழ்த்துறையின் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கனிமொழி கடிதம்

டெல்லி பல்கலைக்கழக தமிழ்த்துறையில் காலியாக உள்ள பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, கனிமொழி எம்.பி கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தின் விபரம்:

“இந்தியாவின் மதிப்புமிக்க மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுவது டெல்லி பல்கலைக்கழகமாகும். பன்முகத் தன்மை கொண்ட பாடத்திட்டங்களும், நாடு முழுவதுமுள்ள பலதரப்பட்ட மாணவர்களும் அப்பல்கலைக்கழக சிறப்பியல்புகளை எடுத்துக் கூறும். இருந்தபோதும், டெல்லி பல்கலைக்கழகம் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்த்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருந்து வருகிறது. அதன் காரணமாக அப்பாடத்திட்டங்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டு, அதனால் டெல்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்த்துறையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் மூலம் முதுநிலை பட்டப்படிப்பு கற்பிக்கப்படும் நிலையில், பேராசிரியர், இரண்டு கூடுதல் பேராசிரியர்கள் மற்றும் இரண்டு துணைப் பேராசிரியர்களின் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.

மத்திய கல்வி நிலையத்தில் தமிழ் பி.எட் படிப்பு கடந்த நான்கு ஆண்டுகளாக கற்பிப்போர் இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டுவிட்டது. மிராண்டா இல்ல கல்லூரி மற்றும் லேடி ஸ்ரீராம் கல்லூரி ஆகியவைகளில் தமிழ்ப் பேராசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அப்பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழகம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க அப்பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.