இந்தியர்கள் 2021 இல் கூகுளில் அதிகம் தேடியது எது?

நவீன தொழில்நுட்பத்தின் தேவையும், பயன்பாடும் பல வகையில் நமது அன்றாட வாழ்வில் உதவி புரிகிறது. இப்போது இணையத்தை பயன்படுத்துவர்களின் முக்கிய விருப்பமாக கூகுள் தேடுதல்பொறி உள்ளது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை இருந்த இடத்தில் இருந்து நொடி பொழுதில் பெறமுடிகிறது. தினமும் கோடிக்கணக்கானோர் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுகின்றனர். இதில்,பலர் தங்களது துறை, பணி சார்ந்த விஷயங்கள் குறித்து தேடி தெரிந்துகொள்பவர்கள். விந்தையான தேடுதல்களை கொண்ட நபர்களும் உண்டு. இந்த வகையில் இந்தியர்கள் அதிகம் 2021 ஆம் ஆண்டில் தேடியவை குறித்து காண்போம்.

 

 

வீட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பது எப்படி?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கியது. தொடக்கத்தில் பலரிடம் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் நிலவினாலும், தற்போது பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இது ஒருபுறம் இருக்க வீட்டிலேயே கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிப்பது எப்படி என்பதற்கான தேடுதல் பலரிடம் எழுந்தது. அதன் விளைவாக, How to make corona virus vaccine at home என்பதற்கான தேடுதல் கூகுளில் 200 சதவீதம் அதிகரித்தது.


ரிஹானா இஸ்லாமியரா?

அமெரிக்காவைச் சேர்ந்த ரிஹானா Good Girl Gone Bad என்ற ஆல்பம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு அதிர்வலையை உருவாக்கியது. இது குறித்த செய்தியை ரிஹானா தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து Is rihanna muslim மற்றும் rihanna religion ஆகியவை குறித்து அதிகம் தேடப்பட்டுள்ளது. பணம் பெற்றுக்கொண்டு அவர் பதிவிட்டதாகவும் இந்தியர்கள் பலர் விமர்சனம் செய்தனர்.

மீராபாய் சானு எந்த ஊரை சேர்ந்தவர்?

மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்காக பதக்கம் வென்றதுமே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை இந்தியர்கள் கூகுள் செய்ய தொடங்கிவிட்டனர். Mirabai Chanu belongs to which state’ என்பதற்கான தேடல் 250 சதவீதம் உயர்ந்தது.

வீட்டில் ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி?

கொரோனா 2வது அலையின்போது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவும் பலரும் உயிரிழந்தனர். இந்த சமயத்தில் வீட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி என்பது குறித்து பலரும் கூகுளில் தேடியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் அதிக பார்வையை பெற்றது.

பராக் அகர்வால் ஐஐடி ரேங்க், சம்பளம்

ட்விட்டர் சி.இ.ஒ பதவியில் இருந்து ஜேக் டோர்சி விலகியதை தொடந்து இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் ட்விட்டரின் புதிய சி.இ.ஒ.வாக அறிவிக்கப்பட்டார். ஐஐடியில் படித்த பராக் அகர்வால் எடுத்த ரேங்க் என்ன என்பது குறித்தும் அவரது சம்பளம் எவ்வளவு என்பது குறித்தும் பலரும் கூகுளில் தேட தொடங்கினர்.

தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி?

தக்காளியின் விலை வானை முட்டும் அளவுக்கு சில வாரங்களுக்கு முன்பு சென்றது. ஒரு சில இடங்களில் 150 ரூபாயை கடந்து ஒருகிலோ தக்காளி விற்கப்பட்டது. இதையடுத்து தக்காளி இல்லாமல் குழப்பு வைப்பது என்பது குறித்து பலரும் தேடத் தொடங்கினர். அதில் அதிகம் தேடப்பட்டது தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்பதுதான்.

மிஸ் யுனிவர்ஸ் HARNAAZ KAUR SANDHU உயரம், வயது என்ன?

இஸ்ரேலில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து பட்டம் வென்றார். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்தவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றதை அடுத்து, இந்தியாவே அவரை கொண்டாடத் தொடங்கியது. ஹர்னாஸ் சந்து குறித்து இணையத்தில் அதிகம் தேடப்பட்டது. குறிப்பாக அவரது உயரம் மற்றும் வயது குறித்த தேடுதல்கள் உச்சம் பெற்றன.