முப்படை தளபதிக்கு நாட்டின் அஞ்சலி!

இந்திய நாட்டின் முதல் முப்படை தளபதியான பிபின் ராவத் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்திருக்கிறார். அவர் மனைவி உட்பட 12 பேர் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துள்ளனர். இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கூடவே பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இவ்வாறு விபத்தில் சிக்கி மரணம் அடைந்திருப்பது எதிர்காலத்தில் தேவையான பல மாற்றங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு வழி  கோலி உள்ளது.

டில்லியில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு  இராணுவ விமானத்தில் வந்து, அங்கிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் படை தளத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இது இரண்டு முக்கியமான பாடங்களைத் தருகிறது. ஒன்று பிபின் ராவத் போன்ற படைத் தலைவருக்கு இன்னும் உயர்ந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்தல். அடுத்து ரஷ்யாவின் ஹெலிகாப்டர் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தல்.

பிபின் ராவத் இந்திய பாதுகாப்புத்துறை வரலாற்றில் முதல்முறையாக தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் முப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டவர். 64 வயதான அவர் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பல நவீன திட்டங்களை உருவாக்கி தொலைநோக்குடன் செயல்படுத்தி வந்தார். காலத்துக்கேற்ற மாற்றங்களைச் செய்வதில் எப்போதும் முன் நின்றவர். அவருடைய இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத ஒன்று.

அதைப் போலவே இந்த ராணுவ ஹெலிகாப்டர் தற்போது உள்ள உலக அளவிலான நவீன ஹெலிகாப்டர்களில் சிறப்பிடம் பெற்றது. 13 டன் எடையை கையாளவும், அதிக மனிதர்களைக் கொண்டு செல்லவும் முடியும். பலவகை பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. என்றாலும் கடந்த 10 ஆண்டுகளில் 6 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பு என்பது எப்பொழுதும் 100 சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும். இதில் நடந்துள்ள தவறு காரணமாக நாம் பிபின் ராவத்  போன்ற நாட்டின் உயர்ந்த தளபதியை இழந்து இருக்கிறோம் என்பது சாதாரணமானதல்ல.

விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது. விசாரணையும் தொடங்கியுள்ளது. இதன் முடிவில் காரணங்கள் தெரியவரும். இதிலிருந்து என்ன நடந்தது என்பதை பாடமாக ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்பொழுதும் உறுதி செய்ய வேண்டும்.

முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட தங்கள் இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் வீர வணக்கங்கள்!