காக்கை, குருவி எங்கே காணோம்?

இயற்கையின் மீது அக்கறையும் சுற்றுச்சூழல் மீது ஆர்வமும் உடையவர்கள் பெருகி வரும் காலகட்டம் இது. பல இளைஞர்கள் பறவை மீது அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். பலர் பறவை கவனிப்பதை பயனுள்ள பொழுது போக்காகக் கொண்டுள்ளனர். நகரத்தைப் பொறுத்தவரை குளக்கரை, ஆற்றங்கரை மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் என்று பறவை கவனிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். கூடவே பல புகைப்படக் கலைஞர்களும் உருவாகி வருகிறார்கள். புதிய புதிய பறவைகள் குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வலசை வரும் பறவைகள் பற்றி பல தகவல்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் உள்ளூர் பறவை இனங்கள் பற்றிய அக்கறையும் தரவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை என்று தோன்றுகிறது. சிட்டுக்குருவி தினம் சில இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது கூடுகள் போல அதற்காக பெட்டிகள் எல்லாம் வைக்கிறார்கள். ஆனால் இது போதாது. சிட்டுக்குருவி தவிர இன்னும் காக்கை, கழுகு, மைனா, கிளி, புறா என்று பல உள்ளூர் பறவைகள் முன்பு ஏராளமாக இருந்தன.

பறவைகள்தான் ஒரு இடத்தின் உயிர்ச் சூழலை அடையாளம் காட்டும் அடையாளம் காட்டி என்பார்கள். அந்த வகையில் காக்கை, குருவி, கழுகு போன்ற உள்ளூர்ப் பறவைகள் தான் அந்த அடையாளச் சின்னங்கள் ஆகும். அவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றன. என்ன காரணம்?

இந்த உள்ளூர்ப் பறவைகள் எல்லாம் மனிதர்களுடன் இங்கு உள்ள இயற்கைச் சூழலுடன் இணைந்து வாழ்ந்து வந்தவை. அந்த சூழல் இப்போது மிக வேகமாக மாறி வருகிறது. எடுத்துக்காட்டாக சிட்டுக்குருவிகள் முன்பு வீடுகளில் உள்ள மூங்கில் பொந்துகளில் கூடுகள் கட்டும். குஞ்சு பொரித்து கிடைக்கும் தானியங்களை உண்டு வாழும். இப்போது வீடுகள் எல்லாம் வேறு முறையில் கட்டப்படுகின்றன. கான்கிரீட் காடுகளாக மாறி விட்டன. வீட்டில் மூங்கிலும் கிடையாது, இடமும் கிடையாது.  தானியங்கள் கூட பிளாஸ்டிக் பையில் தான் வருகின்றன. வெளியே கூடு கட்ட மரங்களும் குறைந்து கொண்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் சிட்டுக்குருவி எப்படி வாழ முடியும் அல்லது பெருக முடியும்?

இதில் இன்னொரு செய்தி வேறு. செல்போன் டவர்களால் இந்த சிட்டுக்குருவிகளின் முட்டைகள் அதிர்வுகளால் தாக்கப்பட்டு அவை இனப்பெருக்கம் செய்வதில்லை என்று ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இது உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டு பல காலம் ஆனாலும் இன்னும் அந்த செல்போனைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மாற்றி உண்மையான அக்கறையோடு பறவைகளை காப்பாற்றும் நிலை வர வேண்டும்.

ஒரு காலத்தில் காக்கைக்கு சோறு வைத்து விட்டு சாப்பிடுபவர்கள் கூட பலர் இருந்தார்கள். மின்சாரக் கம்பியில் உட்கார்ந்து அடிபட்டு ஒரு காக்கை இறந்து விட்டால் பல காகங்கள் வந்து அங்கே சத்தம் இடுவதை அனைவரும் பார்ப்பார்கள். ஆனால் இன்று அந்த நிலையெல்லாம் மாறி விட்டது. யார் இருந்தால் என்ன இறந்தால் என்ன என்ற நிலை வந்து விட்டது. பாஸ்ட் புட் சாப்பிடும் காலத்தில் இந்த அக்கறை எல்லாம் காணாமல் போய்விட்டது.  முன்பெல்லாம் பல வீடுகளில் வீட்டுக்கு வீடு தென்னை மரங்கள் இருக்கும் அங்கெல்லாம் மைனாக்கள் கொஞ்சிக் கொண்டிருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக பனைமரத்தில் கிளியும், ஆந்தையும் தவறாமல் காண முடியும். அவை எல்லாம் இன்று பழங்கனவாய்ப் போய்விட்டது.

இப்போது பறவை மீது உள்ள ஆர்வம் கூட ஒரு பேஷனாக மாறிவிட்டது. பறவை மீது அக்கறை கொள்வதற்கு பைனாகுலர் தேவைப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பறவைகள் தங்கி இருந்த, வாழ்ந்த மரங்கள் எல்லாம் உள்ளூர் வகை மரங்கள் ஆகும். அவையெல்லாம் இப்போது காணாமல் போய் குறைந்து கொண்டே வருகின்றன. பெயர் தெரியாத வெளிநாட்டு மர வகைகள் நகரமெங்கும் நடப்படுகின்றன. இதில் உள்ளூர்ப் பறவைகள் எப்படி தங்கி வாழும்? அவற்றுக்கான உணவு அந்த மரங்களில் எப்படி கிடைக்கும்?

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அந்த சின்னஞ்சிறு உயிர்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். இங்கே பறவை இயல் அறிஞர் சலீம் அலி கூறியதை நினைவு கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும். ஆனால் பறவைகள் இல்லாத உலகில் மனிதர்கள் வாழ முடியாது. அவ்வளவு பயனுள்ள வாழ்வு பறவைகள் உடையது. இயற்கையின் மிக முக்கியமான அங்கம் பறவைகள் ஆகும். அவற்றை பாதுகாப்போம்!