சென்னைக்கு அடுத்து கோவையா?

தமிழகத்தில் பல விஷயங்களில் சென்னைக்கு அடுத்தது கோவை என்று பெருமையாகக் கூறுவது உண்டு. இந்த மழைக் காலத்தில் அது மறுக்க முடியாத உண்மையாகி விட்டது. தமிழகத்தில் சென்னைக்கும் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கும் எப்பொழுதும் ஒரு வேறுபாடு உண்டு. தஞ்சாவூரில், கடலூரில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வரும். பயிர் சேதம் பாதிப்பு ஏற்படும். வெள்ளம் வரும், வடியும் இதுதான் வாடிக்கை.

ஆனால், சென்னையில் மட்டும் மழை நீர் வாய்க்கால்கள் முழுவதும் அடைத்துக் கொண்டு மழை வெள்ளம் வடிய மறுக்கும். குடியிருப்புகளில் வசிப்போர் வெளியே வர முடியாமல் தவிப்பார்கள். தார் சாலைகளில் வெள்ளத்தில் படகுப் போக்குவரத்து நடக்கும். வாகனங்கள் எங்கும் செல்ல முடியாமல் ஊர்வலமாக நிற்கும்.

சென்னைக்கு அடுத்த நகரமான கோவைக்கும் இதே நிலைதான். பொதுவாக கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்தாலும் கோவை நகரப் பகுதியில் மழைநீர் வடிகால் என்பது நடைமுறையில் ச‌ரியான முறை‌யி‌ல் இல்லை என்றே கூற வேண்டும். கோவை நகரத்தை மேற்கு கிழக்காக பிரித்தால், ஒரு சின்ன மழை வந்தால் போதும் கோவையில் இரு புறமும் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். வாகனங்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கும். பள்ளிக் குழந்தைகள் தொடங்கி மருத்துவமனை செல்லும் நோயாளிகள் வரை அது ஓமிக்ரான்  நோயாளியாக இருந்தாலும் சரி வாகனப் பேரணியில் நிற்க வேண்டியதுதான். அவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

சென்ற சனிக்கிழமை அப்படி ஒரு அதிர்ஷ்ட நாள். மதிய நேரம் பார்த்து சில சென்டிமீட்டர் கணக்கில் மழை வந்து விட்டது. அவ்வளவுதான் கோவை நகரமே அல்லல் பட்டுவிட்டது. கோவையை கிழக்கு மேற்காக பிளந்தது போல, எங்கும் போக முடியாமல் இடையில் தண்ணீர் தேங்கி விட்டது. மாநகராட்சிப் பணியாளர்கள், அதிகாரிகள், போக்குவரத்துக் காவலர்கள் இவர்களுடன் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் படாதபாடு பட்டார்கள்.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாலம்,  அவினாசி சாலை மேம்பாலம், காளீஸ்வரா மில் பாலம்,  கிக்கானி பள்ளி பாலம், வடகோவை மேம்பாலம், சிவானந்தா காலனி பாலம் என்று மழைநீர் தேங்கி நின்று வாகனங்கள் எங்கும் செல்ல முடியாதபடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேரம் விரயம், ஆற்றல் விரயம், பொருளாதார விரயம், எரிபொருள் விரயம்  கூடவே ஒவ்வொரு முறையும் மன உளைச்சல் என்று இவ்வளவும் ஒரு நல்ல மழை வந்தால் ஏற்பட்டு விடும் நிலை ஏற்படுகிறது.

முன்பு இருந்த காலத்துக்கு, மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன எண்ணிக்கை, சாலை வசதி அன்று இருந்தது.  ஆனால் இன்று கோயம்புத்தூர் நகரம் 35 வார்டு 72 ஆகி, 72 என்பது 100 ஆக மாறி இருக்கும் பொழுது  சாலை வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்தி இருக்க வேண்டாமா ?

மேற்சொன்ன எல்லா பாலங்களும் ரயில் பாதையைக் கடந்து போவது தவிர, வேறு எந்த உதவியும் நடைமுறையில் செய்வதில்லை. வளர்ந்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் திட்டத்தோடு புதிதாக எந்த திட்டமும் வந்ததாகத் தெரியவில்லை. அதுவும் ஒரு மழைக்காலம் வந்துவிட்டால் போதும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் கொஞ்சம் ஏமாந்தால் நம்மை பாதாளத்தில் கொண்டு போய் விட்டு விடும் அந்த அளவு குண்டும் குழியுமாக கல்லும் கரடுமாக இருக்கின்றன. சாலைகளில் தேங்கும் தண்ணீரை விரைந்து அகற்ற சக்தி வாய்ந்த மோட்டார் மற்றும் பணியாளர் குழுவை இது போன்ற மழைக் காலங்களில் தயாராக வைக்க வேண்டும்.

அதே போல மழைநீர் தேங்காமல் நகரத்தில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மாநகராட்சி, காவல்துறை மற்றும் வல்லுனர்கள் இணைந்து செயல்படும் வகையில் ஒரு எதிர்காலத் திட்டத்தை திட்டமிட வேண்டும். தற்போது ராக் எனும் உள்ளூர் சார்ந்த தொண்டு நிறுவனம் இணைந்து செயல்படுவதாக செய்தி வந்துள்ளது. இது போன்றவர்களை வரவேற்று இணைந்து பணிபுரிய வேண்டும்.

இப்போது இந்த போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக இன்னும் 4 புதிய பாலங்களை  சாய்பாபா காலனி, துடியலூர், சரவனம்பட்டி போன்ற இடங்களில் கட்டுவதாக செய்தி வந்திருக்கிறது. அந்த பாலங்கள் கட்டும் போதும் கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும். தற்போது உள்ள பாலங்களும் இனிமேல் வரப் போகின்ற பாலங்களும் மக்களுக்காக பயன்படும்படி அமைய வேண்டும். மழையில் மாட்டிக் கொண்டு தவிக்கக் கூடாது என்பதே கோயம்புத்தூர் மக்களின் வேண்டுகோள்!