சூலூரில் இருந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் விமானத்தில் டெல்லி புறப்பட்டது

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் விமானப்படை விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் கோவையில் உள்ள விமான படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டது.

நீலகிரி குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், புதுச்சேரி ஆளுநர் குன்னூர் சென்று உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு மரியாதை செய்தனர்.

தொடர்ந்து இன்று மதியம் குன்னூரில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக வீரர்களின் உடல்கள் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டன.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரும் வழிகளில் எல்லாம் பொதுமக்கள் திரளாக நின்று வீரர்கள் உடலை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து விமான படை தளத்திற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன், சூலூர் எம்.எல்.ஏ.கந்தசாமி ஆகியோர் வந்திருந்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமான படைதளத்திற்குள் கொண்டு செல்லப்பட்டன.

பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் சூலூர் விமானபப்டை விமான தளத்தில் இருந்து சி 130சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.