வேளாண் சட்டம் வாபஸ்:  பாஜகவின் வித்தை வெல்லுமா?

விரைவில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் (பஞ்சாப், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்ரகாண்ட்) வரவுள்ள நிலையில் மத்திய அரசு பிடிவாதமாக நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திடீரென வாபஸ் பெற்றுள்ளது நாடு முழுவதும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரும்பு மனிதர் என அழைக்கப்படும் மோடி, இந்த விஷயத்தில் பணிந்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றியது. தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பாஜக கூட்டணிக் கட்சிகளின் முதல்வர்கள் கூட இச்சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசினர். கூட்டணி கட்சி எம்.பி.க்களும் ஆதரவாக வாக்களித்தனர். நாடு முழுவதும் இச்சட்டம் முக்கிய விவாதப் பொருளாகவே மாறியது.

இச்சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஜாட் சமூக மக்கள் கணிசமாக வாழும் மாநிலங்களில் போராட்டம் வலுத்தது. ஜாட் சமூகத்தினர் இந்த மாநிலங்களில் சீக்கிய,  இந்து மதங்களை தழுவியவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இச்சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் தூண்டுதலின் பேரில் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராடி வருவதாக முதலில் பாஜக கூறியது. ஆனால், பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பாஜக இச்சட்டத்தை வாபஸ் பெறாமலும் விவசாயிகளிடம் நல்ல உடன்பாடு எட்டுவதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை. மாறாக பாஜகவினர் இச்சட்டத்தை ஆதரித்து பேசுவதற்கு பதில், விவசாயிகளுக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினர். இதற்கிடையே இச்சட்டத்துக்கான எதிர்ப்புப் போராட்டம் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் பரவியது.

இந்நிலையில், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த பேரவை இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்தது. குறிப்பாக ஜாட் சமூகத்தினர் கணிசமாக வாழும் தொகுதிகளில் பாஜக வாக்கு வங்கி மிகவும் சரிந்தது. இந்நிலையில், இச்சட்டத்தை திரும்பப் பெறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது அனைத்துத் தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மோடியின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு முக்கிய காரணம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்,  பஞ்சாப்,  மணிப்பூர், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல் வருவதாலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளது என்ற பேச்சு எழுந்துள்ளது. குறிப்பாக இச்சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தது பஞ்சாப்,  ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தான். அதிலும் குறிப்பாக ஜாட் இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே இதற்கு எதிராக உறுதியாக போராடினர்.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது வேளாண் சட்டங்களையும் தாண்டி, கடந்த சில ஆண்டுகளாகவே  ஜாட் சமூகத்துக்கு எவ்வித அரசியல் முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக மோடிக்காக 2014,  2019 மக்களவைத் தேர்தலில் வாக்களித்த ஜாட் மக்களுக்கு மத்திய அரசிலோ அல்லது ஹரியானா மாநிலத்திலேயோ முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஹரியானாவில் தொடர்ந்து இருமுறையும் மனோரிலால் ஹட்டா எனப்படும் சத்திரி சமூகத்தைச் சேர்ந்தவருக்கு தான் முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இது அங்கு 30 சதவீதம் வாழும் ஜாட் மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல மேற்கு உத்தரபிரதேசத்தில் கணிசமாக வாழும் ஜாட் மக்களுக்கும் (15 சதவீதம்) அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இங்கு மட்டும் 71 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவர்கள் பாஜகவுக்கு எதிராக திரும்பினால் உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைப்பது சிரமம் தான்.

கடந்த ஓராண்டாக நடந்து வரும் விவசாயிகள் பிரச்சினைக்கு பிரதமர் மோடி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  நவம்பர் முதல் வாரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஜாட் மக்கள் கணிசமாக வாழும் தரிவாட், வல்லபநகர் ஆகிய 2 தொகுதிகளில் பாஜக படுமோசமான தோல்வியை அடைந்தது. இத்தேர்தலுக்கு முன்பே பாஜகவுடன் கூட்டணியில் இருந்து ஜாட் சமூகத் தலைவர்  ஹனுமன்பெனிவால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அதேபோல பஞ்சாப்பிலும் சிரோன்மணி அகாலிதளம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.

இதன் விளைவு, தரிவாட் தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு பாஜக தள்ளப்பட்டது. வல்லபநகர் தொகுதியில் 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டு பாஜக டெப்பாசிட் இழந்தது.  இது பாஜக தலைமைக்கு மிகக் கடினமான எச்சரிக்கையைக் கொடுத்தது. எனவே, அடுத்த ஒரு வாரத்துக்குள் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக மோடி அறிவித்தார்.

மேலும் இமாச்சலபிரதேச மாநில 3 தொகுதிகளில் தலா ஒன்றில் வெற்றி, ஒன்றில் இரண்டாவது,  மற்றொன்றில் 4 சதவீதத்துக்கும் குறைவாக வாக்கெடுத்தது பாஜகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். இந்த சட்டத்தை வாபஸ் பெற்றது, அடுத்து வரும் உத்தரபிரதேச தேர்தலில் கைகொடுக்கும் என மோடி நம்புகிறார். இதற்கு முந்தைய மோடி செயல்பாடு படி பார்த்தால் நில கையகப்படுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட போது குர்மி, குர்ஜார் இன மக்களை ஒன்று சேர்ந்து எதிர்த்தபோது அதை வாபஸ் பெற்றார் மோடி. தனக்கு ஆதரவாக வாக்களித்த சமூகத்தினரை ராகுல் காந்தி ஒன்று திரட்டியபோது அதை சாதுர்யமாக முறியடித்தார்.

2018 இல் இதேபோன்ற சம்பவம் நடந்தது. இந்திய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தலித், பழங்குடியினருக்கு நிறைவேற்றிக் கொடுத்தார் பிரதமர் மோடி. இதற்கு காரணம், குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே,  பாஜக மக்களவை உறுப்பினர்கள் உதித்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகிய தலைவர்கள் ஒன்றிணைந்து பாரத் பந்த் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட போது, அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை தலித், பழங்குடியினருக்கு ஆதரவாக செய்து கொடுத்தார்.

இதன் விளைவு,  அடுத்த 6 மாதத்தில் நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஷ்கர் ஆகிய மாநில பேரவைத் தேர்தல்களில் உயர் வகுப்பினர் பாஜகவுக்கு எதிராக திரும்பியதால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை இழந்தது. இதை புரிந்துகொண்ட மோடி, தனக்கு வாக்களித்த சமூகம் எதிராக  சென்றதால் உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அவர்களை சமாதானப்படுத்தினார். இதன் பலனை 2019 மக்களவைத் தேர்தலில் அறுவடை செய்தார் மோடி. 2019 மக்களவைத் தேர்தலில் தலித்,  உயர் வகுப்பினரின் பெரும்பான்மை வாக்குகளை பாஜகவுக்கு இது பெற்றுக் கொடுத்தது. இவ்வாறாக தனக்கு வாக்களித்த மக்களை கவலைப்படாமல் பார்த்துக் கொள்வதை மோடி பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

இதேபோலத் தான்,  ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தலில் ஜாட் மக்கள் தனக்கு எதிராக திரும்பி இருப்பதை புரிந்துகொண்டார் மோடி. இன்னொரு சம்பவம் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், ஜாட் சமூகத்தைச்  சேர்ந்தவர். முன்னதாக தேவிலால், சரண்சிங் ஆதரவாளராக வலம் வந்தவர். இப்போது பாஜகவில் ஆளுநர் பதவியைப் பெற்றுக் கொண்டார். சில நாள்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசியபோது வேளாண் சட்டங்கள் தொடர்பாக தான் மோடியிடம் கடிந்து கொண்டதாகவும், சத்வன்சிங், பீம்சிங் (இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவர்கள்) ஆகியோரை மறக்க வேண்டாம் என்றும் ஜாட் இனக் கூட்டத்தில் பேசினார். இவ்வாறாக ஜாட் சமூக கொந்தளிப்பை குறைக்க அவர்களது கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார் மோடி. இதனால் ஜாட் சீக்கியர்கள் கணிசமாக வாழும் பஞ்சாப் மாநிலத்தில் எவ்வித மாறுதலும் வரப்போவதில்லை. அங்கு பாஜக 4 வது  இடத்தில் தான் உள்ளது. இந்த அறிவிப்பால் அங்கு பாஜக வாக்கு வங்கியும் பலப்பட போவதில்லை.

ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு இந்த முடிவு கணிசமான ஆதரவைத் தரக்கூடும். குறிப்பாக ஜாட் வாக்குகளை கொண்டு வராவிட்டாலும் ஜாட் இனத்தவர்களின் கோபம் குறையும். இதுவே வேளாண் சட்டத்துக்கு பின் இருக்கும் அரசியல்.  அனைத்து இந்து சமுதாயத்தின் ஆதரவையும் பெற மோடி முயற்சி செய்கிறார். வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றதன் மூலம் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்கட்சி கைகளில் ஏந்த இருந்த ஆயுதத்தை பிடுங்கியுள்ளார் மோடி. மேலும், ஜாட் மக்கள் கணிசமாக வாழும் 35 முதல் 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு ஏற்பட இருக்கும் சரிவை ஓரளவு தடுக்க முயற்சிக்கிறார் மோடி. மோடி வித்தை வெல்லுமா என்பதற்கு விரைவில் வரவுள்ள பேரவைத் தேர்தல்களில் பதில் கிடைக்கும்.

எதிர்க்கட்சி ஆயுதத்தைப் பிடுங்கியுள்ளார்!

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, பிரதமர் மோடி நடைமுறை அரசியலை நன்கு புரிந்தவர். இந்த விவசாய சட்டத்திற்கான போராட்டம் என்பது ஜாட் சமூகத்திற்கு பாஜக மீது உள்ள அதிருப்தி தான் காரணம். ராஜஸ்தான் இடைத் தேர்தல் முடிவுகளைக் கண்ட பிரதமர் மோடி, இந்தப் பிரச்சினையை உடனே சரிசெய்ய வேண்டும் என நினைத்து விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளார். இதன்மூலம் எதிர்க்கட்சிகளிடம் இருந்த ஆயுதத்தை பிடுங்கி வீசியுள்ளார் பிரதமர் மோடி.