‘ஒமிக்ரான்’ பரவுதல் வேகமும், வீரியமும் அதிகமாக இருக்கும் – மருந்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனாவின் புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் இந்த புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய பகுதிகள் வழியாக வருவோரை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. எனினும், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைவதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. அவ்வகையில், புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட வைரஸ், அங்கு 6 பேருக்கும், போட்ஸ்வானாவில் 3 பேருக்கும், ஹாங்காங்-கில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டது. இங்கு உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று, முதலாவதாக ஐரோப்பாவில் பெல்ஜியத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவோருக்கும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதேபோல, சீனா, தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வருவோருக்கு கட்டுப்பாடு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

உருமாற்ற வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக இருக்கும் எனவும் தடுப்பூசி போட்டவர்களும் நோய் தாக்குதலுக்கு ஆளாவார்கள் என மருந்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த புதிய வகை கொரோனா குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவின் நான்கு மாறுபாடுகளான ஆல்பா , பீட்டா , காமா மற்றும் டெல்டா ஆகியவற்றை கவலைப்படத்தக்கவை என உலக சுகாதார மையம் வகைப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், பி.1.1.529 மாறுபாடும் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆபத்தானவை என பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழையும் சர்வதேச பயணிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.