இது என் தொகுதி மக்களுக்கு கிடைத்த மரியாதை  – வானதி

திங்களன்று கோவையில் ரூ.87.73 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த அரசு விழாவில் கோவை மாவட்ட அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க., வை சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் அமர  முன் வரிசை இருக்கை வழங்கப்பட்டிருந்தது.  எதிர்க்கட்சியை சேர்ந்த 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விழாவில் பங்கேற்காத நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்விற்கு வந்த வானதிக்கு விழா மேடையில் இருக்கை வழங்கப்பட்டு வாழ்த்துரை வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் வானதி கலந்து கொண்டது குறித்து அவரிடம் தொலைபேசியில் அணுகியபோது, அவர் கூறியது:-

நடப்பது அரசு விழா. என்னுடைய தொகுதியில் நடக்கும் விழா. மூன்று நாட்களுக்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி என்னை அழைத்து அரசு விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார். பின், நேற்று அழைப்பிதல் ஏதும் அச்சிடவில்லை, எனினும் நீங்கள் வாருங்கள், மேடைக்கு எதிரே முதல்வரிசையில் இடம் தருகிறோம் என்றார்.

ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால் என் தொகுதியில் நடக்கும் முதல் பொது நிகழ்ச்சி என்பதாலும் கலந்து கொண்டேன். கோவை சிறைச்சாலையை மாற்றவேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் பேசியபோது,  முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார். விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான முயற்சிகளை அரசு உடனே  எடுக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டபோதும் அதற்கு  ரூ.1100 கோடி ஒதுக்கி பணியைத் துவக்கியுள்ளனர்.

எனவே நான் கோரிக்கை வைத்த விஷயங்கள் திடமாக நடைபெறும்போது, மக்கள் பிரதிநிதியாக நான் அங்கு இருக்க வேண்டும் என்று நினைத்து சென்றேன்.

நானும் இன்று காலை தான் விமானம் வழியாக கோவை வந்தேன். முதல்வர் பாதுகாப்பிற்கான வாகனங்களுக்கு பின் தான் நானும் வந்தேன். சிறு தாமதாமாகிவிட்டது. எனக்கென வழங்கப்பட்ட முன்வரிசையில் நான் அமர்ந்தேன். அதை மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் பார்த்து, முதல்வரிடம் தெரிவிக்க, அவர் அமைச்சர்களிடம் கூறி, என்னை மேடையில் உள்ள இருக்கையில் அமருமாறு அழைத்தனர், என்றார்.

இவ்வாறு உங்களை மேடையில் அமர கேட்டுக்கொண்டதை எப்படி பார்க்கின்றீர்கள்?

இந்த விழா கோவை தெற்கில் நடைபெற்றது, இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நான். இப்படி என்னை அமர செய்தது என் தொகுதி மக்களுக்கு கிடைத்த மரியாதையாக பார்க்கின்றேன், என்றார்.

இதனால் உங்கள் கட்சி தலைமை  ஏதேனும் கேள்விகள் எழுப்பினால்?

நான் இந்த விழா முடிவடைந்ததும் மாநில தலைவர் (அண்ணாமலை) அவர்களிடம் பேசினேன். அவரும் ‘ நான் செய்திகளில் பார்த்தேன் அக்கா’ என்று மகிழ்ச்சியடைந்தார்.

அரசியல் நாகரிகத்திற்கு பெயர் பெற்றது பா.ஜ.க.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்கள் டெல்லி சென்றால் எங்கள் அமைச்சர்கள் அவர்களை வரவேற்று, அமரவைத்து, கேட்காமலேயே பல திட்டங்களை நிறைவேற்றி தரக்கூடியவர்களாக எங்கள் அமைச்சர்கள் உள்ளனர்.  அப்படிப்பட்டவர்களைத்தான்  அமைச்சர்களாக பா.ஜ.க.வில் நாங்கள் வைத்து உள்ளோம்.

கட்சி எங்களுக்கு அப்படித்தான் சொல்லித் தந்துள்ளது. மக்கள் நலனென்றால் முதலில் இறங்கி, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாமல், அவமானங்கள் ஏதும் பாராமல் மக்கள் நலன், நாட்டின் நலன் முக்கியம் என்று கட்சி எங்களுக்கு கற்றுத் தந்துள்ளது, என்றார்.