டீனேஜ் பிள்ளைகளை புரிந்து கொள்வதில் சிக்கல்?

வாழ்வில் மிக சந்தோஷமான தருணங்கள் என்றால் அது டீனேஜே நாட்களாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்வாகநாட்களாக இருக்கும். இருப்பினும் இந்த பதின் பருவத்தில் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு மாற்றங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இதற்கு நமது சுற்றுசூழல் முழு ஒத்துழைப்பை தந்தால் மட்டுமே நாம் நல்ல மனிதர்களாக வளர்ந்து வர முடியும். இதில் பெற்றோர்களுக்கு அதிக பங்குண்டு. தனது பதின் பருவ பிள்ளைகளுடன் பெற்றோர்கள் எந்த அளவிற்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

பெரும்பாலும் டீன் ஏஜ் வயதில் உள்ள பிள்ளைகள் பலவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஆவலாக இருப்பார்கள். எனவே அவர்கள் உங்களிடம் எதை கூற வந்தாலும் அதை காது கொடுத்து கேளுங்கள். தாம் சொல்வதை கவனிப்பவர்களிடம் மட்டுமே அதிக நம்பிக்கை உண்டாகும். அவர்களுக்கு பதின் பருவத்தில் வரும் பிரச்சனைகள், பள்ளியில் ஏற்படும் சண்டைகள், மனநிலை மாற்றங்கள் இவற்றை பகிரும்போது அதை கிண்டல் செய்வதையோ, சாதாரணமாக எடுத்து கொள்வதையோ தவிருங்கள். மாறாக அவர்களுக்கு நல்ல நண்பராக இருந்து வழிநடத்துங்கள்.

குழந்தைகள் வளர வளர அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பார்கள். எனவே அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுத்து விடுங்கள். ஒரு வேளை அவர்கள் தவறு செய்தால், அதை ஒரு நல்ல நண்பன் போல அவர்களுக்கு எடுத்து கூறி திருத்துங்கள். இப்படி செய்வதால் உங்களின் உதவிகளை அவர்கள் பெரிதாக எண்ணி, உங்களின்மீது அதீத நம்பிக்கை பிறக்கும்.

டீன் ஏஜிற்குள் நுழையும் போது பல பிள்ளைகள் தனக்கான பிரைவசி வேண்டும் என நினைப்பார்கள். எனவே அவர்களின் தனியுரிமையை எப்போதும் மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகளை தடுக்காமல், அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருந்து அவற்றை செய்ய சொல்லுங்கள். மேலும் பிள்ளைகளின் சமூக, மனநல விஷயங்களை கண்காணிக்க விரும்புகிறீர்கள் என்றால், அது அவர்களுக்கு அப்படிப்பட்ட உணர்வை தருவதாக இருக்கக் கூடாது.

ஒரு உறவு நல்லபடியாக இருக்க வேண்டுமென்றால் நம்பிக்கை மிக முக்கியம். உங்கள் பிள்ளை உங்களை நம்ப வேண்டும் என எப்படி நீங்கள் நினைக்கிறீர்களோ, அதே போன்று அவர்களும் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என நினைப்பார்கள். எனவே உங்கள் இருவருக்குமான உறவு ஆழமாக இருப்பதற்கு, முதலில் நீங்கள் அவர்களை நம்ப வேண்டும்.