குழந்தைகளுக்காக மாநகராட்சி பள்ளியை சுத்தம் செய்த பெற்றோர்கள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு கோவை மாநகராட்சி பள்ளியை அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களே சுத்தம் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை தற்போது பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. வரும் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளியில் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகிறது. 80 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர அவர்களது பெற்றோர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளி வகுப்புகளை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் பெற்றோர்களே முன்வந்து வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர்.

வகுப்பறைகளை கூட்டி சுத்தப்படுத்துதல், கரும்பலகைகளை துடைத்தல், தண்ணி தொட்டிகளை கழுவி தூய்மை படுத்துதல், இருக்கைகளுக்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை பெற்றோர்களே மேற்கொண்டு அசத்தியுள்ளனர்.

ஏற்கனவே இந்தப் பள்ளி சிறப்பான செயல்பாடுகளுக்காக பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளதும், இந்தப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் எம்.எல்.ஏ சிபாரிசுக் கடிதத்துடன் வந்ததும் குறிப்பிடத்தக்கது.