ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு இலவச சித்த மருத்துவ முகாம்

கோவையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான இலவச சித்த மருத்துவ முகாமை வள்ளலார் வைத்தியசாலை தொடங்கியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்த போது, வள்ளலார் வைத்தியசாலை தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடிய வள்ளலார் ஐங்கூட்டு சூரணங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியது.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமை கோவையில் தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கோவை பூமார்க்கெட் வள்ளலார் சன்மார்க்க அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் ராம்தாஸ் மற்றும் சென்னை செல்வபூபதி தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் மற்றும் அன்னாம்பிகா பிரதாப் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

இதில் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து தங்களது ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான இலவச சித்த மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இது குறித்து மருத்துவ முகாமின் ஒருங்கிணைப்பாளர் மங்கள பிரபு கூறுகையில், சித்த மருத்துவ முறைகளை ஏற்கனவே மிக சிறப்பாக வள்ளலார் வைத்தியசாலை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் கோவையை தலைமையிடமாக கொண்டு பெரிய சித்த மருத்துவமனையை தொடங்க உள்ளதாக கூறினார்.

மேலும் இது போன்ற முகாம்களை வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.