ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ‘பிங்-பாட்’ தளம் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மார்பக் புற்றுநோய் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘பிங்க்-பாட்’ என்ற டிஜிட்டல் விழிப்புணர்வு தளம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ‘பிங் மாதம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

இந்த மாதத்தில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெறும்.

அந்த வகையில் மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பிங்க்-பாட் என்ற செயற்கை நுண்ணறிவு தளம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பான சந்தேகம் உள்ளவர்கள் வாட்ஸப் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் மார்பகப் புற்றுநோய் என்பது என்ன? அறிகுறிகள் என்ன? பக்க விளைவுகள் மற்றும் சிகிச்சைமுறை என்ன? என்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

இதுகுறித்து ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன் கூறியதாவது:

இந்தியாவில் 14 சதவீத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. நான்கு நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரிய வருகிறது.

கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஆய்வு அறிக்கையின்படி ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 468 பேருக்கு மார்பகப் புற்றுநோய் புதிதாக பதிவாகியுள்ளது. 87 ஆயிரத்து 90 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தாமாகவே தங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கட்டிகள் அல்லது தசை வளர்ச்சி அடிப்படையில் சுய பரிசோதனை செய்து அறிந்து கொள்ள முடியும். ஆரம்ப நிலையிலேயே இந்த நோயை கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எங்கள் மருத்துவமனை நிர்வாகம் செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கியுள்ளது.

9739738558 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ‘HI’ குறுஞ்செய்தி அனுப்பி இதுகுறித்து அறிந்துகொள்ள முடியும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ‘பிங்-பாட்’ உடன் உரையாடலாம். ஆடியோ-வீடியோ வடிவிலும் அறிந்து கொள்ளலாம் எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லஷ்மி நாராயணசாமி, முதன்மை செயல் அலுவலர் ஸ்வாதி ரோஹித், அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.