வேகமான மனக் கணக்கு போட்டி: நேஷனல் மாடல் பள்ளி மாணவன் சாதனை

ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நடத்திய ‘வேகமான மனக் கணக்கு’ போட்டியில் கோவை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியை சேர்ந்த விஷால் கிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது கணித திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். இம்மாணவன் “முழு எண்களின் இரண்டு இலக்க பெருக்கத்தின் வேகமான மனக் கணக்கு” என்ற பிரிவில் ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 7 நிமிடம் 5 வினாடியில் 60 கணக்குகளை செய்து முடித்துள்ளார்.

விஷால் கிருஷ்ணன் ஆரம்பகால பள்ளி நாட்களில், 3 நிமிடம் 59 வினாடிகளில் 250 இலக்கங்களைச் சேர்ப்பதில் சாதனை படைத்து ‘அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு’ விருதை பெற்றுள்ளார்.

இது குறித்து நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் டாக்டர் கீதா லட்சுமண் கூறுகையில், எல்லா மாணவர்களிடமும் திறமை உள்ளது என்ற சித்தாந்தத்துடன் எங்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. எங்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை அடையாளம் கண்டு அதை அவர்கள் வளர்த்துக் கொள்ள உதவுவதோடு அவர்கள் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “முழு எண்களின் இரண்டு இலக்க பெருக்கத்தின் வேகமான மனக் கணக்கு” பிரிவில் சாதனை படைத்துள்ள 12- ம் வகுப்பு மாணவன் விஷால் கிருஷ்ணன் குறித்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

இது குறித்து விஷால் கிருஷ்ணன் கூறுகையில், “அனைத்து பொருளாதார அடுக்குகளில் குறிப்பிடத்தக்க திறன்களைக் கொண்ட மாணவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த உலக சாதனைத் தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தளங்கள் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. இந்த வெற்றியை பெறுவதற்காக நான் பள்ளியிலும் எனது நண்பர்களிடமும் நிறைய ஒத்திகைகளை செய்து பார்த்தேன். எனக்கு ஆதரவளித்த பள்ளி முதல்வர், பயிற்சியாளர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் எனது வழிகாட்டியான மூர்த்தி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் கூறினார்.