ஏன் அவர் பெரியார்?

– இராமகிருட்டிணன், தலைவர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தந்தை பெரியாரின் 143 வது ஆண்டு பிறந்தநாளையொட்டி இனி வரும் காலங்களில் அவர் பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடுவோம் என்றும், அரசு அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்போம் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த சமூகம் பல நூறு ஆண்டு காலமாக சமநிலையில் இல்லாமல், ஏற்ற தாழ்வுகளோடு இருந்தது. சாதி வேற்றுமை, ஆண் – பெண், ஏழை – பணக்காரன், படித்தவன் –  படிக்காதவன் போன்ற பாகுபாடுகள் இருந்தன.  இந்த சமநிலையற்ற நிலையைப் போக்குகின்ற வகையிலும், சமுதாயம் இதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் வாழ்நாள் முழுவதும் போராடியவர்   பெரியார். அவரின் கருத்துகளை இன்றைக்கு பெரும்பாலான மக்கள் சரி என்றே உணருகிறார்கள். தமிழ்ச் சமுதாயத்தில் முழுமையாக பெரியாரின் கருத்துகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும், மக்கள் மனதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் எண்ணத்தோடும்  முதல்வர் சமூக நீதி நாளை அறிவித்திருக்கிறார். இந்த சமூக நீதி நாள் (செப் 17) பெரியாரின் வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

ஏன் கடவுள் மறுப்பாளர்:

சமூகத்தில் இருந்த ஏற்ற தாழ்வுகளைக் கண்டே பெரியாரின் மனதில் கடவுள் இல்லையென்ற கருத்து தோன்றியது.  கடவுள் கருணை உள்ளவர், நீதிமான் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் அவர் படைத்தார் என்று சொல்லக் கூடிய உயிர்களில் ஒருவன் கீழானவனாகவும், மேலாதிக்கம் படைத்தவனாகவும் வேறுபடுத்தப்படுகிறான். மேலும், சாதியத்தால் மனிதர்கள் பிளவுபட்டு ஒடுக்கப்பட்டார்கள்.

தெருவிலே நடக்கக் கூடாது, செருப்பு அணியக் கூடாது,  மேல் துண்டை இடுப்பில் கட்ட வேண்டும், தேநீர்க் கடைகளில் இரட்டை டம்ளர், சுடுகாட்டில் கூட வேற்றுமை, கோவில்களில் நுழையத் தடை போன்ற அநீதிகளைப் பார்த்த போது பெரியாருக்கு கடவுள் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டது. கடவுள் இருப்பார் எனில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாரா? இந்த ஏற்ற தாழ்வுகளை சகித்துக் கொண்டிருப்பாரா? அவர் படைத்த பிள்ளைகளையே நான்கு பிரிவுகளாக  ஏன் பிரிக்க வேண்டும்? அதன் அவசியம் என்ன? என்ற கேள்விகள் அவர் உள் எழுந்த போது நாத்திகராக மாறுகிறார். இது கடவுள் செயல் அல்ல, ஆதிக்க எண்ணம் படைத்த மனிதர்களால் உருவாக்கப்பட்டது என உணர்ந்து கடவுள் மறுப்பை சொல்லுகின்றார். பெயருக்கு பின்னால் இருந்த சாதியை ஒழித்ததில் பெரும் பங்காற்றினார்.

பெரியார் கண்ட பெண்ணியம்:

பெண் விடுதலை பற்றி உலகில் எத்தனையோ தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் பேசியும், எழுதியும் உள்ளார்கள். ஆனால் பெரியாரைப் போல பெண் சமூகத்துக்காகப் பேசியதும், எழுதியதும் அவர்களுக்காக போராடியவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

எதிலும் முதன்மை பெறும் ஆணைச் சார்ந்தே பெண்ணின் வாழ்க்கை நகர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்படி சார்ந்து இருப்பதால் சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். “பெண் என்பவள் பதிக்கு பக்தியாக இருக்க வேண்டும்”, “பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி” போன்ற நடைமுறைகள் நிலவி வந்தன. “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என்று வீடுகளில் பெண்களை முடக்கி வைத்தார்கள். இவற்றை மாற்றுகின்ற வகையில் பெரியார் பிற்போக்கு சிந்தனைகள் அனைத்தையும் எதிர்த்தார். பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பெண்கல்வியை வலியுறுத்தினார்.

ஆண்களைச் சார்ந்தே பெண்கள் வாழ வேண்டும் என்ற நிலை மாறிட பெண்களுக்கு கல்வி கிடைத்தால் சுய சிந்தனை கொண்டவர்களாக மாறுவார்கள். அதனால் ஆண்களை நம்பி, அவர்களை சார்ந்து இருக்க கூடிய நிலை மாறும்.

வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு தரவேண்டும் என்றார். அதில் 40 சதவீதத்தை நாம் எட்டி விட்டோம். தந்தையின் சொத்தில் ஆண்களுக்கு மட்டுமே பங்கு என்ற நிலை இருந்த போது பெண்ணிற்கும் சொத்து வழங்கப்பட வேண்டுமென போராடினார். காவல் துறையில் பெண்களை நியமிக்க வேண்டும் என்று முதலில் பேசியவர் பெரியார் தான்.

பெரியாரின் தத்துவங்கள் இன்று பெண்களை மிகப்பெரிய அளவில் சுதந்திரமாக செயல்பட வைத்துள்ளன. பெண்கள் பலவீனமானவர்கள், வலிமை குன்றியவர்கள் என தாழ்வு படுத்திய போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் ஆண்களை விட விஞ்சி வருவார்கள் என அன்றே சொன்னார். அதன்படியே இன்று நடந்து வருகிறது. பெரியார் கண்ட பெண் விடுதலையில் மிகப்பெரிய எழுச்சியை தமிழகம் கண்டுள்ளது.

சமூக விஞ்ஞானி:

உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களுக்காகவும் விஞ்ஞானி ஆராய்வான், சிந்திப்பான். அதுபோல பெரியாரும் ஒரு சமூக விஞ்ஞானி. மொழி, மதம், நாடு, தேசம் என்ற எல்லைகளைக் கடந்து சிந்திப்பார். மனித சமூகமே  உயர்வடைய வேண்டும் என்று நினைத்தார். 95 வயது வரை இந்த சமூகத்திற்காக மட்டுமே சிந்தித்தார். எந்த வித ஏற்ற தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த சமூகம் சாதி, மத பேதமற்ற சமூகமாக மாறவேண்டும் என நினைத்தார்.

சாக்ரடீஸ் எனும் அறிஞரை உலகம் நன்கு அறியும். ஆங்கில புலமை இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் அவரும், அவரின் கருத்துக்களும் பேசப்பட்டது. ஆனால் பெரியாரின் தத்துவங்களும், பேச்சுகளும், எழுத்துகளும் தமிழில் இருந்த காரணத்தால் அவரது கருத்துக்கள் தமிழ் நாட்டோடு நின்று விட்டது. ஆனால் பெரியார் மேலை நாடுகளில் இருந்திருந்தால் அவரும் சாக்ரடீஸ் போல அறியப்பட்டு இருப்பார். ஆகவே தான் ஐ. நா மன்றம் பெரியாரை தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று போற்றியது.

மனித சமூகத்தைப் பற்றிய ஆழமான சிந்தனை கொண்ட அவருக்கு சுயநலம், ஆணாதிக்க எண்ணம் கிடையாது. ஏராளமான மூட நம்பிக்கைகள் எல்லாம் மக்கள் மத்தியில் இருந்த போது அதற்கான கேள்விகளை முன் வைத்தார். பெரியார் பேசிய அறிவு சார்ந்த பேச்சுக்கள், நமக்காகத் தான் என்ற உணர்வு மக்களுக்கு வந்துள்ளதோடு அவர் கூறிய கருத்துகள் இன்றளவும் பொருந்திப் போகிறது.

ஒரு சமயம் நாக்கில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை மருத்துவர் கண்டறிந்து குணப்படுத்தி விட்டார். மருத்துவரிடம் நன்றி கூறும்போது,  “நான் இந்த வியாதி குறித்து கவலை கொள்ளவில்லை, கடவுள் இல்லை என்று சொன்னதால் தான் இந்நோய் ஏற்பட்டு விட்டது என்று கூறி என் தத்துவத்தையே அழித்திருப்பார்கள்”  என, அப்போதும் தனது உயிரை குறித்து  கவலைப்படாமல் தான் கொண்ட கொள்கைகளைப் பற்றியே சிந்தித்தார். தான் இறக்கும் வரையிலும் பொது வாழ்வில் ஈடுபட்டு சமூகநலனுக்காக உழைத்தார்.

 

ARTICLE BY: RAMYA .S