பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்களின் பட்டியலில் கோவை முதலிடம்

நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்களின் பட்டியலில் கோவை மாநகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டிலுள்ள பெருநகரங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக பதிவானதில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.,), நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக கடந்தாண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்கு விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு உட்பட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டிலுள்ள, 19 பெருநகரங்களில், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்த தகவல்களை என்.சி.ஆர்.பி., வெளியிட்டது. இதன்படி, குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. 2ம் இடத்தை சென்னை பெற்றுள்ளது.

கோவை மாநகரை பொறுத்தவரை, சராசரியாக ஒரு லட்சம் பெண்களில், 9 பேருக்கு எதிராக குற்றங்கள் பதிவாகியுள்ளதாக, புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில், சராசரியாக ஒரு லட்சம் பெண்களில், 13.4 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில், கேரளா மாநிலத்தின் கொச்சி நகரம் இடம்பெற்றுள்ளது.
இதன் வாயிலாக, முதல் மூன்று இடங்களை தென்னிந்தியாவிலுள்ள பெருநகரங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த, 2019ஐ காட்டிலும் 2020ல், பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 2019ல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, 44 ஆயிரத்து, 783 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில் 2020ல், 35 ஆயிரத்து, 331 ஆக குறைந்துள்ளது.

கோவையை பொறுத்தவரை, 2019ல், 85 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில் 2020ல், 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2019ஐ காட்டிலும் அதிகம் என்றாலும், ஒட்டுமொத்த பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளன.

கோவை பெருநகரத்தை பொறுத்தவரை சராசரியாக 1 லட்சம் பெண்களில் 9 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது எனவும், சென்னையை பொறுத்தவரை சராசரியாக 1 லட்சம் பெண்களில் 13.4 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.