வீடு வீடாகச் சென்று தடுப்பூசி டோக்கன் வழங்கும் மாநகராட்சி ஊழியர்கள்

கோவையில் நாளை (12.09.2021) ‘மெகா’ தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பு செலுத்துவதற்கான டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் நாளை 1.5 லட்சம் தடுப்பூசிகளுடன் ‘மெகா’ தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் சத்துணவு மையங்கள் என 1166 முகாம்களிலும் மாநகராட்சி பகுதியில் 308 முகாம்களிலும் என மொத்தம் 1474 இடங்களில் இந்த மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

இதனிடையே கோவை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.

சாதாரண நாட்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கும், டோக்கன்களை வாங்குவதற்கும் நீண்டநேரம் காத்திருந்த சூழலில், இந்த தடுப்பூசி முகாம் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் வீடுகளுக்கே சென்று டோக்கன்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.