‘காட்டுத் தீ’ கற்றுத் தந்த பாடம்?

தேனி மாவட்டத்தின் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் என்ற பெயரில் சுற்றுலா சென்றவர்களுக்கு நடந்த விபத்து தமிழகத்தின் அனைத்துத்தரப்பு மக்களின் மனதிலும் சோகத்தையும், இந்திய அளவில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மலைப்பகுதியில் இருந்து பலரைக் காப்பாற்ற வேண்டிய நிலையோடு, ஒன்பது உயிரற்ற உடல்களையும் சுமந்து வர வேண்டிய நிலை. போர்க்கால நடவடிக்கை போல மத்திய, மாநில அரசின் வனத்துறை, வருவாய், தீயணைப்புத் துறை, உள்ளூர் மக்கள் எனப் பலரும் இணைந்து படாத பாடுபட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். உயிருடன் மீட்கப்பட்டவர்களிலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் தராமல் தீக்காயத்தின் தீவிரத்தன்மையால் உயிரிழந்த சோகமும் நடந்தேறி இருக்கிறது. இன்னும் சிலருக்கு தீக்காயங்களின் சதவீதம் அதிகமாக இருப்பது பெரும் கவலையைத் தருகிறது. பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

இருபத்தோராம் நூற்றாண்டில் பல வசதி வாய்ப்புகளுடன் தகவல், போக்குவரத்து வசதிகளும் உள்ள தற்போதைய நிலையிலேயே இந்த அவலம் நடந்தேறி இருக்கிறது. உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிவாரணம் வழங்கப்படுகிறது. இது குறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆனால் இந்த எதுவும் சென்ற உயர்களைத் திரும்பக் கொண்டு வரப்போவதில்லை.

எப்போதும் நடக்கும், நடந்த நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனி நடக்கப் போவதில் கவனம் செலுத்துவதன் மூலம்தான் அறிவார்ந்த சமுதாயம் என்பதன் பொருள் விளங்கும்.

ஆனால் நாம் அப்படித்தான் இருக்கிறோமா என்று பார்த்தால், பல நேரங்களில் இல்லை என்றே தோன்றுகிறது. அனுமதி வாங்காமல் போனார்கள் என்று சிலரும், வனத்துறையினரின் கவனக்குறைவு என்று சிலரும், பணத்துக்காக மலையேற்றம் நடக்கிறது என்று சிலரும், இது சமூக விரோதிகளின் செயல் என பலரும் அவர்களது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கின்றனரே தவிர உண்மையான அக்கறை எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

முதலில், மலையேற்றம் என்பது ஒன்றும் தவறான செயல் இல்லை. ஆனால் அது வணிகரீதியாக, கவனக்குறைவாக, அலட்சியமாக நடந்தேறும்போது என்ன நிகழுமோ அது நிகழ்ந்திருக்கிறது. இரண்டாவதாக, இப்பகுதி ஒரு பெரும் காடு; அதுவும் உலகின் பழைமை வாய்ந்த மலையான மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள உயிர்ச்சூழல் மண்டலம்.

இங்கு வருபவர்கள், சென்றவர்கள் இதனை ஒரு வனப்பகுதி எனக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தெரிந்திருந்தால், இவ்வாறு இருபது, முப்பது பேர் எனக் கூட்டமாக திருவண்ணாமலை ஜோதி பார்ப்பதற்கு போவது போல, இவ்வளவு சென்சிடிவ் ஆன பகுதிக்கு எவ்விதமான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டு வசதிகளும் இல்லாமல், வந்திருக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகள், பெண்கள் என்று கூட்டமாக இவ்வளவு சிக்கல்கள் கொண்ட மலைப்பகுதியில் சுற்றுலா வர வேண்டிய அவசியம் என்ன?

அதைப்போலவே தலையை எங்கோ வைத்துக்கொண்டு, வாலை எங்கோ ஆட்டுவதுபோல, எங்கோ சென்னையில் உட்கார்ந்து கொண்டு ஆன்லைன் பிசினஸ் போல மலையேற்றத்தை ஏற்பாடு செய்த அந்த மலையேற்ற வணிக நிறுவனம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆயிரம் தடவை ஒழுங்காக சுற்றுலா மற்றும் மலையேற்றங்களை நடத்தினால் மட்டும் போதாது. ஒரு தடவைகூட எவ்வித விபத்தும் இல்லாமல் நடத்துவதில்தான் அதன் தரம் அடங்கி இருக்கிறது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், நமது நாட்டிலும் இமயமலை போன்ற பகுதிகளில் பல மலையேற்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அவையெல்லாம் தொழில் முறை நிறுவனங்களால், தகுதி மிக்க வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டிகளின் துணையோடு நடத்தப்படுகின்றன. அங்கேயும் இதுபோல விபத்துகள் எப்போதாவது நிகழ்வதுண்டு. ஆனால் அவையெல்லாம் வெறும் விபத்துகள். இதுபோல அலட்சியங்கள் அல்ல.

இங்கே நடந்தவற்றில், நம்முடைய சமூகத்துக்கே உரிய பல சிக்கல்கள் தங்கள் பல்லைக் காட்டுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த பல ஆயிரம் ஏக்கர் வனத்தைக் காக்கும் பொறுப்பில் உள்ள வனத்துறையின் பற்றாக்குறை பணியாளரில் தொடங்கி, நிதி, தொழில் நுட்பம் என்று ஒரு பட்டியலே நீளுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது இரண்டு வனத்துறைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது எந்த பலனையும் தராது.

இது அனைவரும் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டிய தருணம். அரசாங்கம்தான் பொறுப்பு என்றால், அந்த அரசாங்கம் யார்? நாம்தானே? நாம் ஒழுங்காக இருக்கிறோமா? இருந்தால் குழந்தை குட்டிகளோடு அவ்வளவு பெரிய வனப்பகுதியில், மலைப்பகுதியில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் தப்பிக்க எந்த விதமான வசதியும் இல்லாத இடத்தில் தெரிந்தே சுற்றுலா போவார்களா?

அதைப்போல, இந்த மலையேற்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஏற்கெனவே இந்த வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து கொண்டு இருப்பது தெரியாதா? அந்தத் தீ இவர்களைக் கேட்டுக்கொண்டு இவர்கள் கட்டுப்பாட்டில்தான் இயங்குமா? அப்படி ஒரு விபத்து, தீயோ, ஏதாவது விலங்குகளோ என ஆபத்து நேரிட்டால் இவர்கள் அதனை எதிர்கொள்ள என்ன சாதனங்கள் வைத்திருக்கிறார்கள்? வெறுமனே காசு வைத்திருப்பவர்களின் ஆசையைத் தூண்டி வணிகம் செய்வதைத்தவிர இதில் வேறு ஒன்றும் பெரிதாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதுபோன்ற மலையேற்றப் பயிற்சிக்கு போகும் பெண்கள் உள்பட குழந்தைகள் பலருக்கு அதற்கான உடற்பயிற்சியோ, தகுதியோ இல்லை. ஏதோ ஒரு நிறுவனத்தில் கை நிறைய காசு வாங்குகிறோம் அல்லது கல்லூரி வாழ்க்கையில் யாரோ ஒருவரது பணத்தில் வசதியாக வாழ்கிறோம் என்பதால் வரும் வெற்று சாகச உணர்வைத் தவிர இவர்களுக்கு வேறு எவ்வித முன்னெச்சரிக்கை உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதற்கிடையில் அரசாங்கமும் வனத்துறையும் வனமும் இதில் மாட்டிக்கொண்டு விழிக்கின்றது என்று தோன்றுகிறது. இதைவிடவும், பல நூறு பேர் அடங்கிய குழுவினர் கோவில், குளம் என்று ஆங்காங்கே சிறிய, பெரிய மலைகளில் ஏறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கும்  அவ்வப்போது விபத்துக்களும் நடக்கின்றன. ஆனால் அவற்றுக்கு பின்னால் ஒரு லாஜிக் இருக்கிறது.

இந்த குரங்கணி தீ விபத்தில் அப்படி எந்த லாஜிக்கும் இல்லை. முப்பது, நாற்பது பேர், சென்னை போன்ற தொலை தூரத்தில் இருந்து குழந்தை குட்டிகளுடன் வருகிறார்கள். பலருக்கும் இந்த மலையைப்பற்றியோ, வனப்பகுதியைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. ஏற்பாடு செய்தவர்களும் இதைப்பற்றி சொல்லித்தருவதற்கோ, அறிவுறுத்துவதற்கோ முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை.

ஒரு வார காலமாக, அந்த மலைப்பகுதியில் காய்ந்த புற்களில் இருந்து தீ  எரிந்து கொண்டிருக்கும்போது இதுபோன்ற சாகச, வணிக நோக்கம் கொண்ட கோஷ்டிகளை வனத்துறை எதற்காக அனுமதித்தார்கள் என்றும் தெரியவில்லை. இவர்களின் மூலமாக வரும் சிறு வருவாய் எவ்வகையிலும் அரசுக்கு உதவப்போவதில்லை. ஒரு யானை தாக்கி ஒரு மனிதர் மரணமடைந்தால் அரசாங்கம் சில லட்சங்கள் இழப்பீடு தர வேண்டி உள்ளது.

இந்த நிலையில் இது போன்ற சிக்கலான வனப்பகுதிகளில் அனுமதி தருவதைத் தவிர்க்க விதிமுறைகள் ஏற்படுத்த வேண்டும். அது வனத்துக்கும், வனத்துறைக்கும் அரசாங்கத்துக்கும், மொத்தத்தில் மக்களுக்கும் நல்லது.

அவ்வாறு செய்வதன் மூலம் பல ஆயிரம் பேரின் நேரம், ஊடகங்களின் பிரேக் நியூஸ், தலைவர்களின் விவாதம், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என பலவும் மிச்சமாகி அவற்றை வேறு தேவையான பணிகளுக்கு செலவிட முடியும். வனமும், மலையும் பாதுகாக்கப்படும்.