மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு ஆலோசனை மையம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு, சுயதொழில் மற்றும் திறன் மேம்பாடு ஆலோசனை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவா் சமீரன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

நிகழ்வில் ஆட்சியர் சமீரன் பேசும்போது, தனியார் துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுகென்று கடந்த வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு, சுயதொழில் மற்றும் திறன் மேம்பாடு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையம் நிரந்தமாக செயல்படும். இம்மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தகுதிகள் மற்றும் திறன்களுக்கு தகுந்தவாறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். மேலும், சுயதொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிகளில் கடன்கள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இதன்மூலம், மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு இணையாக பொருளாதார முன்னேற்றம் பெற்று வாழ்க்கையில் நல்ல நிலையினை அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தெரிவித்தார்.