ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 35ம் கல்வியாண்டின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா புதன்கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவினை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மி நாராயணசுவாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து விழா பேருரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் கல்லூரியின் பாரம்பரியத்தையும் தனிச் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். இக்கல்லூரி கல்விப்பணியோடு சமூகசேவையிலும் விளையாட்டுத் துறையிலும் தனிகவனம் செலுத்திவருகிறது என்பதைக் குறிப்பிட்டுப் பேசியதோடு மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், கல்லூரியில் உள்ள வசதிகள், வேலைவாய்ப்பு பெற மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்டார். மேலும், உலகின் தலைசிறந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்போது உயர் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

யூடியூப் மற்றும் முகநூல் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்வினை1800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் தீனா வரவேற்புரை ஆற்றினார். முதன்மையர் சண்முகானந்த வடிவேல் நன்றியுரை வழங்கினார்.