எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை போல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதுகுறித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறியதாவது, கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், மானிய எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என்பது எளிய மக்களின் வாழ்வை பெரிதாக பாதிக்கும். ஒன்றிய அரசு உடனடியாக விலையை பாதிக்கும் கீழ் குறைக்க வேண்டும் எனவும், மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காமல் அரசே அதனை நிர்வாகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள், திராவிட தமிழர் கட்சி, சி.பி.ஐ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தோர் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.