ஒரே நாளில் இரு கலைகளில் கோவை மாணவி சாதனை

கோவை செலக்கரச்சல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காருண்யலட்சுமி, ஒரே நாளில் கிராமியம் மற்றும் பரதக்கலைகளில் இரண்டு வெவ்வேறு உலக சாதனைகள் செய்து பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை செலக்கரசல் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் வாசுகி, தம்பதியரின் மகள் காருண்யலட்சுமி. தனியார் கல்லூரியில் எம்.காம் பயின்று வரும் இவர் பரதநாட்டியம் மற்றும் சிலம்பம் பயிற்சியாளராகவும் உள்ளார். இந்நிலையில் பரதம், நாட்டுப்புற கலை மற்றும் தற்காப்பு ஆகிய கலைகளை இணைத்து உலக சாதனை புரிய விரும்பிய இவர் ஒரே நாளில் இரண்டு கலைகளையும் இணைத்து, வெவ்வேறு உலக சாதனை புரிந்துள்ளார்.

வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் கிராமிய புதல்வன் அகாடமி சார்பாக செலக்கரச்சல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி மைதானத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இவரது குரு டாக்டர் கனகராஜ்,மற்றும் ஐ.நா வின் இளைஞர் அமைப்பின் தூதுவர் டாக்டர் கலையரசன் ஆகியோர் முன்னிலையில் மாணவி காருண்யலட்சுமி தலையில் கரகம் ஏந்தி, ஒற்றைக்காலில் நின்றபடி 40 நொடிகளில் 56 முத்திரைகளை அபிநயம் செய்து சாதனை படைத்தார்.

பத்தாக்கம், மயூரம், கத்திரி முகம், அஞ்சலி, கற்கடகம், தபோத்தம் என 56 முத்திரைகளையும் ஒற்றைக்காலில் நின்று தலையில் கரகம் வைத்து, குறைந்த நேரத்தில் செய்து பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து பானை மீது நின்றபடி தலையில் தீக்கரகம் ஏந்தி இரண்டு கைகளிலும் சிலம்பத்தை தொடர்ந்து சுற்றி இரண்டாவது உலக சாதனையையும் இவர் படைத்தார்.

ஒரே நாளில் கிராமியம் மற்றும் பரதக்கலையில் இரண்டு வெவ்வேறு உலக சாதனை படைத்த சாதனை மாணவிக்கு வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவன தலைவரும், கலை பண்பாட்டு பிரிவின் தீர்ப்பாளரும் ஆன டாக்டர் கனகராஜ் மற்றும் கிராமிய புதல்வன் டாக்டர் கலையரசன் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.