கோமாரி நோய் தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி மார்ச் 1 முதல் 21 ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள 93.7 லட்சம் எண்ணிக்கை பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு போடப்பட உள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இந்நோய்க்கான ஊநீர் அதற்கென உருவாக்கப்பட்ட குளிரூட்டும் அறைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசிப் பணிக்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிக் குழுவினர் மூலம் குளிர் சங்கிலி முறையில் ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களை கணக்கிட்டு, அவ்வினத்திற்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 100% தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும்.

மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால் உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.