கோவில்களில் தொடரும் தீ விபத்து… அதிர்ச்சியில் பக்தர்கள்!

கடந்த பிப்ரவரி 3ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி சாம்பலாயின. இதில் மண்டபத்தின் மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. மேலும், நூற்றுக்கணக்கான புறாக்களும் கருகி சாம்பலாகின.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தின் உச்சியில் திடீரென தீப் பிடித்து எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்வுகளாக கோவில்களில் தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திருவாலங்காடு கோவில் ஸ்தல விருட்சம் எரிந்தது, கும்பகோணத்தில் கற்ப கிரகத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டது என்று அடுத்தடுத்து நடந்த தீ விபத்துகள் பக்தர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தின் உச்சியில் நேற்று திடீரென தீ பற்றியது. கோவில் திருவிழாவின் போது வெடிக்கப்பட்ட வானவேடிக்கைகள் மரத்தின் மீது விழுந்ததில் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. கோவில் மரம் தீப்பிடித்து எரிவதைக் கண்டு பக்தர்கள் பதறியடித்து ஓடி தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் தலத்தின் உள்ளே இருந்த கோவில் மரம் இத்தனை ஆண்டுகள் இல்லாமல் திடீரென தீப்பிடித்ததை பக்தர்கள் அபசகுனமாக நினைக்கின்றனர்.

தமிழ்.ஒன்இந்தியா.காம்