கே.பி.ஆர் கல்லூரியில் ‘கூத்தின் வழியது நாடகம்’ – கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் இணையவழியில் (26/07/2021) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி லைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக, கும்பகோணம், அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு ” கூத்தின் வழியது நாடகம் ” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

கூத்து, தமிழர்களின் பாரம்பரிய நாட்டர் கலை வடிவங்களில் ஒன்று. கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை என்று குறிப்பிட்டார்.

கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது.

அவர்கள் அன்று பொது முற்றத்தில் ஆடியவை இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தக் கூத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் கூத்துக்களின் கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரையும் ஈர்ப்பவையாக அமைந்துள்ளன என்று எடுத்துரைத்தார்.

மேலும், சங்க இலக்கியச் சான்றுகள், அழிந்து போன இசை நூல்கள், கூத்து நூல்கள் எனப் பல சான்றுகளை சுட்டிக்காட்டி நிறைவு செய்தார்.

நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.