ஓவர் ஒர்க் – அவுட் உடம்புக்கு ஆகாது

மாறிவரும் நமது உணவு முறை கலாச்சாரத்தினால் உடல் எடை கூடியோரை அதிகம் காண முடிகிறது. அதேசமயம் எடையைக் குறைக்கும் ஆர்வமும் பலரிடம் தோன்றியிருப்பதை பார்க்க முடிகிறது. அப்படி குறைக்க நினைப்பவர்களில் சிலர் உடனே உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்கிற பேராசையை கொண்டிருப்பார்கள்.

தற்போது உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி கொடுத்துள்ளார்கள். இதனால் உடற்பயிற்சி கூடங்களை நோக்கி படையெடுக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உடல் எடையை உடனடியாக குறைக்கும் எண்ணம் கொண்டவர்கள் தங்களால் முடியவில்லை என்றாலும் கடின உழைப்பைக் கொடுத்து பயிற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் வல்லுநர்கள் ஒரு நாளைக்கு 30 – 40 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியை தினமும் கடைபிடித்து வந்தாலே போதும் என்கின்றனர்.

நீங்கள் அதிக உடற்பயிற்சி மேற்கொள்வதால் தொடர்ந்து அடுத்தடுத்த பயிற்சிகளை செய்யமுடியாமல் போவதோடு நாள் முழுவதும் களைப்பாக உணர்வீர்கள். 7-8 மணி நேரம் உறங்கினாலும், ஆரோக்கியமான காலை உணவினை உட்கொண்டாலும் களைப்பாகவே உணர்வீர்கள்.

உடற்பயிற்சியின் போது நீங்கள் கடினமான உழைப்பை கொடுக்கும் போது உடலில் உள்ள தசைகள் தனது இயல்பான ஆற்றலை இழக்கத் தொடங்கும். அவ்வாறு ஆற்றலை இழக்கும்போது உங்களின் பயிற்சியின் வேகமும் குறையும். மேலும் கடின உடற்பயிற்சி உள்காயம், தசைவலி, முதுகுவலி, மூட்டு வலி போன்றவற்றை உண்டாக்கும். இதனால் மறுநாள் பயிற்சி செய்ய முடியாமல் போகலாம்.

அதிகம் உடற்பயிற்சியினால் தசைகள் மிகுந்த அழுத்தத்தில் இருந்து வலியை ஏற்படுத்தும். இதனால் உடனே தூக்கம் வராமல் அவஸ்தையாக இருக்கும். தசைகள் இலகுவாகி ஓய்வுக்குச் சென்றால்தான் தூக்கம் வரும். எனவே உடலுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதை தவிருங்கள்.