நுங்கு வண்டி, டயர்களை ஓட்டி நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் டயர் மற்றும் நுங்கு வண்டிகளை சாலையில் ஓட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை (01.07.2021) ஈடுபட்டனர்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவது பொதுமக்களை வேதனையடையச் செய்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த மூன்று தினங்களாக இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக வினர் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது டயர்கள், மற்றும் நுங்கு கூடுகளை கொண்டு தயாரித்த விளையாட்டு வண்டிகளை சாலைகளில் இயக்கி எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

மேலும், மத்திய அரசுக்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பினர். சாலைகளில் நுங்கு வண்டி மற்றும் டயர்களை ஓட்டியது காண்போருக்கு நகைப்பை ஏற்படுத்தியது.